2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’உறவுப்பாலம் உறங்கியது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல், இன்று (07), டெல்லி, லோதி வீதியிலுள்ள மின் தகன மேடையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இவர், நேற்று (06) இரவு, மாரடைப்பு காரணமாக, டெல்லியுள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

நேற்று பிற்பகல் அவரது உடல் டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல், இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, டெல்லி லோதி சாலையிலுள்ள மயானத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளில், அவரது மகள் பன்சூரி சுவராஜ், கணவர் சுவராஜ் கௌசல், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

யார் இந்த சுஷ்மா

ஹர்தேவ் சர்மா- ஸ்ரீமதி லக்ஷ்மி தேவி ஆகியோருக்கும் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சுஷ்மா பிறந்தார். இறக்கும்போது அவருக்கு 67 வயதாகும். ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் பிறந்த சுஷ்மா சுவராஜின் குடும்பம், பாகிஸ்தான் லாகூரிலிருந்து பிரிவினையின் போது, இந்தியாவுக்குக் குடியெர்ந்திருந்தனர்.

சுஷ்மாவின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த வந்த நிலையில், சிறு வயதிலிருந்தே, ஆர்.எஸ்.எஸ் கருத்துகளைக் கேட்டு வந்த இவருக்கு, சமஸ்கிருதம் மொழி மீது, அதிகளவான பற்று இருந்தது. அதில் பட்டம் பெற்ற அவர், அரசியல் மீதான ஆர்வத்தின் காரணமாக, அரசியல் விஞ்ஞானப் பிரிவிலும் பட்டம் பெற்றார். அதேநேரம் சட்டமும் அவர் பயின்றார்.

பின்னர், 1970ஆம் ஆண்டு, பாரதிய வித்யார்த்திய பரீஷித் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, அரசியல் குறித்து முதன் முதலில் கற்றுக்கொண்டார்.

உயர் நீதிமன்றத்தில், 1973ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பணியாற்றியதோடு, அரசியலிலும் மெதுவாக நகர்ந்து, தனக்கான பாதையை அவராகவே அமைத்துக்கொண்டு, தனது அரசயில் பயணத்தை ஆரம்பித்தார்.

அவருடைய கணவர் சுவராஜ் ​​கௌஷலும் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் அரசியல் களத்திலும் சட்டத்துறையிலும் அவரால் பயணிக்க முடிந்தது.

இந்நிலையில் தான், அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். அப்போது, அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து, சுஷ்மா போராடினார். அதன் பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1977ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சுஷ்மா, 1982ஆம் ஆண்டு வரை, அம்மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதன்பின்னர், ஹரியாணா மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது, அவருக்கு 25 வயதே ஆகும்.

தன்னுடைய 27ஆவது வயதில், ஹரியாணாவில் பா.ஜக.வின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் சுஷ்மா. ஒக்டோபர் மாதம் 1998ஆம் ஆண்டில், டெல்லியின் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அதே ஆண்டு டிசெம்பரில் மத்திய அமைச்சர் பதவிக்காக, முதலமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.

பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்த சுஷ்மா சுவராஜ், ஹரியாணாவைச் சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியிலும் நின்று, மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார். தகவல், தொலைத்தொடர்பு துறை, குடும்ப நலத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போதுதான், போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் எய்ம்ஸ் வைத்தியசாலையைக் கட்டமைத்தார். 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியபோது, பா.ஜ.க மக்களவைக்கான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

கடந்த பா.ஜ.கவின் ஆட்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார் சுஷ்மா. வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, டுவிட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், டுவீட் மூலம் தன்னிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வந்தார். அத்துடன், குடியுரிமைப் பிரச்சினை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, எப்போம் கவனத்திலேயே இருந்து வந்தார்.

உடல் நலக்குறைவுக் காரணமாக, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அவர் போட்டியிட்டிருக்கவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர், இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை, சுஷ்மா சுவரா​ஜ் கொண்டுள்ளார்.

இறுதி நிமிடங்கள்

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த டுவிட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று, காஷ்மிர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, ரூ.1 கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள 7ஆம் திகதி வரும்படி, இந்தியா தரப்பு சர்வதேச வழக்கறிஞரிடம் சுஷ்மா கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை மீட், சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா முறையிட்டு, வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வாதாடி வரும் ஹரிஷ் சால்வி என்பவருக்கே, இவர், ரூ.1 கட்டத்தைப் பெற்றுச் செல்ல வருமாறு, தொலைபேசியில் கூறியுள்ளார். (இந்தியாவுக்காக வாதாடுவதால், பெயருக்கு ரூ.1 மட்டுமே கட்டணமாக பெறுகிறார் சால்வே)

அமெரிக்கா, சீனா புகழாரம்

சுஷ்மா சுவராஜுக்கு சீனா, அமெரிக்கா நாட்டு தூதர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், இந்தியாவின் தூதராக சுஷ்மா சுவராஜ் பார்க்கப்பட்டார். வெளியுறவு அமைச்சராக, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தியதில், முக்கிய பங்காற்றினார். 2019இல், இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சிறப்பாக நடத்தினார்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

சீன தூதர் சன் வெயிடோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா காலமான செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்தியா சீனா இடையிலான உறவுக்கு அவர் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்த மத தலைவர் தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கடினமான நேரத்தில், எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பொது மக்களிடம் நட்புடன் நடந்து கொள்வதிலும், அக்கறை செலுத்தியதிலும் அனைவராலும் மதிக்கப்பெறறார். மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை சேவையாக மாற்றினார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான விஜயங்கள்

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி, இந்திய – இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக, சுஷ்மா சுவராஜ், இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற வகையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற வகையில், சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வரவேண்டும் என்று, தமிழகம் சார்பில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழலில், அண்டை நாடான இந்தியா வெறும் அனுதாப செய்தியை வெளியிடுவதோடு நின்று விடாமல் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்கிற சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் அமையவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இரங்கலும் அஞ்சலிகளும்

“இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“மிகச் சிறந்த அரசியல் தலைவர்; பேச்சாளர்; கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்” என்று, ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்கவையில், சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அவருடைய மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுஷ்மா சுவராஜின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பேரிழப்பாகும். அவர் பெண்களுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்

இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா சுவராஜை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

“சுஷ்மா சுவராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ்” என்று, தி.மு.க தலைவர் ஸ்டாவின் தனது, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இ​தேவேளை, பாஜகவிலுள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் என்றும் பெண்கள் வாழ்வில் முன்னேறுவது தான், சுஷ்மா சுவராஜூக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“ ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர். கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ்” என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசாங்கம் 2 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, என டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் நினைவைப் போற்றும் வகையில், அவரது மறைவுக்கு அரசாங்கம் சார்பில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X