2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகம் முழுவதிலும் 68.5 மில். மக்கள் இடம்பெயர்வு

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர், வன்முறை, பழிவாங்கல் ஆகிய காரணங்களுக்காக, உலகம் முழுவதிலும் 68.5 மில்லியன் மக்கள், தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து காணப்படுகின்றனர் என, ஐக்கிய நாடுகள் நேற்று (19) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இவ்வாறு இடம்பெயர்ந்தோர் அதிகமாகக் காணப்பட்ட நாடுகளாக, மியான்மாரும் சிரியாவும் காணப்படுகின்றன.

2016ஆம் ஆண்டின் முடிவில், இடம்பெயர்ந்து காணப்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, 2017ஆம் ஆண்டு முடிவில் இடம்பெயர்ந்துள்ளோரின் எண்ணிக்கை, சுமார் 3 மில்லியன் பேரால் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்ட, அகதிகளுக்கான ஐ.நா முகவராண்மை, ஒரு தசாப்தத்துக்கு முன்னர் காணப்பட்ட 42.7 மில்லியன் பேருடன் ஒப்பிடும் போது, 50 சதவீதத்தால் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டது.

கடந்தாண்டு மாத்திரம், 16.2 மில்லியன் பேர், புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர் என, அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளோரின் எண்ணிக்கை, தாய்லாந்தின் சனத்தொகைக்கு ஒப்பானது என்பதோடு, உலகிலுள்ள 110 பேருக்கு ஒருவர், இடம்பெயர்ந்து காணப்படுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, புதிய வகையான அணுகுமுறை தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்ட அவ்வறிக்கை, இதுவரை இடம்பெயர்ந்து காணப்படுவோரில் சுமார் 70 சதவீதமானவர்கள், 10 நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் எனவும் குறிப்பிடுகிறது.

சிரியாவைச் சேர்ந்த 6.3 மில்லியன் பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மேலும் 6.2 பேர், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், அறிக்கை குறிப்பிடுகிறது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2.6 மில்லியன் பேரும் தென் சூடானைச் சேர்ந்த 2.4 மில்லியன் பேரும், இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகில் முரண்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்ட, அகதிகளுக்கான ஐ.நா தூதுவர் ஃபிலிப்போ கிரான்டி, இப்பிரச்சினைத் தீர்ப்பதற்கான அரசியல் முன்னேற்பாடு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .