2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘உலகின் தொன்மையான மொழி தமிழ்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள சென்னை தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்தியப் நரேந்திர பிரதமர் மோடி, தமிழின் தொன்மை குறித்தும், தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் மாணவர்கள் குறித்தும் புகழ்ந்து பேசினார்.

சென்னை தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று (30) கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்திநர்களாக தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவர்கள் வேட்டி-சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் பட்டங்களை பெற்றனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியைக் காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது. உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உங்கள் வெற்றியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களை நாம் உற்சாகப்படுத்துவோம். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன்.

உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்விச் சாலையில் வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்றுநோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தில் படித்தவர்கள் தான். உலக முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கிறார்கள். பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்திய இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கையை கண்டு உலக தலைவர்கள் வியக்கிறார்கள். இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புக்கள் உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் தேவையைப் புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இதுவரை 200 தொழில் முயற்சிகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். எந்திரவியல் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை தொழில்நுட்ப இந்திய நிறுவகத்தின் முதன்மை இடம்பிடிக்கிறது. கடின உழைப்பால் முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்திய மாணவர்களுக்கு உள்ளது. உலகின் முதல் மூன்று தொழில் முயற்சி கண்டுபிடிப்புக்கள் இந்தியாவினுடையது” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .