2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊடகங்களின் முன்னால் எதிரணியினருடன் மோதினார் ட்ரம்ப்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியின் முதன்மை உறுப்பினர்கள் இருவருடனும் இடம்பெற்ற சந்திப்பு, ஊடகங்களுக்கு முன்னால், இரு தரப்பினரும் முரண்பட்ட சந்திப்பாக மாறியது. இதன்போது, ஐ.அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையிலான எல்லையில் மதிலொன்றை அமைப்பதற்கான நிதியை வழங்காவிட்டால், அரசாங்க முடக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.

காங்கிரஸின் பிரதிநிதிகள் சபைக்கான ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எதிர்கால சபாநாயகராக வருவார் என எதிர்பார்க்கப்படுபவருமான நான்சி பெலோசி, செனட்டில் ஜனநாயகக் கட்சியின் தலைவரான சக் ஷூமர் ஆகியோரே, ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சந்தித்திருந்தனர். இச்சந்திப்பு, ஊடகங்கள் புகைப்படமெடுப்பதற்கான வாய்ப்பாகவே ஆரம்பத்தில் அமைந்தது.

ஐ.அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையிலான எல்லை மதிலை அமைக்கப் போவதாக, ஜனாதிபதி ட்ரம்ப், தனது பிரசாரக் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், அதை அமைப்பதற்கான நிதியை வழங்க வேண்டமென, காங்கிரஸைக் கோருகிறார். மறுபக்கமாக, அம்மதிலை அமைப்பதற்கு, மெக்ஸிக்கோவே நிதியளிக்குமெனவும், ஜனாதிபதி ட்ரம்ப், முன்னர் தெரிவித்திருந்தார். அத்தோடு, குறித்த எல்லை மதில், பயன்தராத ஒன்று எனவும், வீணான ஒன்று எனவும், ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.

அண்மையில் நடைபெற்ற மத்தியகாலத் தேர்தலில், பிரதிநிதிகள் சபையை, ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி முதல், எந்த நிதியளிப்பும், ஜனநாயகக் கட்சியின் உதவியுடனேயே வழங்கப்பட முடியும். இப்போதும் கூட, குடியரசுக் கட்சியினரே இரண்டு சபைகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள போதிலும், நிதியளிப்புத் தொடர்பான சட்டமூலங்களுக்கு, ஜனநாயகக் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. ஆனால், ஊடகங்கள் இருக்கும் போதே, மூன்று பேரும் முரண்பட்டிருந்தனர். குறிப்பாக ஜனாதிபதி ட்ரம்ப், தனது வழக்கமான விட்டுக்கொடுக்காத தன்மையை வெளிப்படுத்த, பிரதிநிதிகள் சபை தங்களிடம் உள்ள நிலையில், ஜனாதிபதியின் நியாயமற்ற கோரிக்கைகள் என்று கருதியவற்றை, ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்தனர்.

குடியேற்றவாசிகள் தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் கூறப்பட்ட பொய்யான தகவல்களைச் சுட்டிக்காட்டிய செனட்டர் சக் ஷூமர், அரசாங்க முடக்கம் ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பும், ஜனாதிபதி ட்ரம்ப்பையே சாரும் என எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .