2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘எல்லைச் சுவரைக் கட்டுவேன்’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், எல்லைச் சுவரொன்றைக் கட்டியெழுப்பப் போவதாக உறுதியளித்த ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

“தேசத்தின் நிலை” என்ற பெயரின் அழைக்கப்படும், ஜனாதிபதியின் வருடாந்த உரையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.அமெரிக்க காங்கிரஸின் இரண்டு அவைகளினதும் முன்னால், இலங்கை நேரப்படி நேற்று (06) காலை இவ்வுரையை ஆற்றிய அவர், ஒற்றுமைக்கும் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சியின் முதலிரு ஆண்டுகளிலும், பிரதிநிதிகள் சபையும் செனட்டும், அவரது கட்சியான குடியரசுக் கட்சியின் கீழேயே காணப்பட்ட நிலையில், பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய பின்னர் இடம்பெற்ற முதலாவது “தேசத்தின் நிலை” உரையாக இது அமைந்திருந்தது. 82 நிமிடங்கள் உரையாற்றிய அவர், தனது அரசியல் முன்னுரிமைகளை முன்வைத்த போதிலும், கொள்கைகள் அடிப்படையில் தனித்தனியான விளக்கத்தை வழங்கியிருக்கவில்லை.

ஐ.அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்வருகைகள் இடம்பெறுவதை, “அவசரமான தேசிய நெருக்கடி” என அவர் வர்ணித்த போதிலும், அதைத் தடுப்பதற்காக எல்லைச் சுவரை அமைப்பதற்கு, தேசிய அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கவில்லை. மாறாக, பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், இணக்கப்பாடொன்று வரவேண்டுமென அவர் கோரினார்.

பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் மீதான விசாரணைகளை நடத்துவதற்கான இயலுமையை அவர்கள் பெற்றுள்ள நிலையில், அதற்கான முயற்சிகளும் வெளிநாடுகளில் இடம்பெறும் போர்களில் ஐ.அமெரிக்காவின் பங்களிப்பும், ஐ.அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்குமென அவர் எச்சரித்தார்.

ஐ.அமெரிக்காவின் பொருளாதார “அதிசயமொன்று” ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வேலையற்றோர் சதவீத வீழ்ச்சி, உற்பத்தித் தொழில்களின் அதிகரிப்புப் போன்றவற்றை உதாரணமாகக் காட்டினார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையின் அநேகமான நேரங்களில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் மௌனமாகவே அமர்ந்திருந்தனர்; குடியரசுக் கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், அரசியல் சார்பற்ற விடயங்களை ஜனாதிபதி தெரிவித்தபோது, ஜனநாயகக் கட்சியினரும் கைதட்டி வரவேற்றனர்.

கேலிக் கைதட்டல்?

ஜனாதிபதி ட்ரம்ப்பின் “தேசத்தின் நிலை” உரையின் போது, பழிவாங்கலை விடுத்து, விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக வேண்டுமென அவர் தெரிவித்த போது, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோஸி (ஜனநாயகக் கட்சி), அவரைப் பார்த்துக் கைதட்டுகிறார். அவரது இக்கைதட்டல், கேலியான வகையிலேயே மேற்கொள்ளப்பட்டது எனக் கருதப்படுகிறது. இப்புகைப்படம், சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் நேற்று (06) பிரபலமாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X