2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஏவுகணைகளை நிர்மாணிக்கிறது வடகொரியா’

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஏவுகணைகளை நிர்மாணிக்கும் பணியில், வடகொரியா ஈடுபட்டு வருகிறது என, ஐக்கிய அமெரிக்க புலனாய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரங்களில் பெறப்பட்ட செய்மதிப் படங்கள், ஏனைய ஆதாரங்கள் ஆகியவற்றைக் கொண்டே, இம்முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு, சிங்கப்பூரில் இடம்பெற்று சில வாரங்களிலேயே, ஒன்று அல்லது இரண்டு, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை நிர்மாணிக்கும் பணியில் வடகொரியா ஈடுபட்டுள்ளது என, புலனாய்வுத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.அமெரிக்காவைச் சென்றடையக்கூடிய, வடகொரியாவின் முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கப்பட்ட, சனும்டொங் பகுதியிலேயே, இந்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டிருந்த ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியா இனிமேல், அணுவாயுத அச்சுறுத்தலைத் தரும் நாடு இல்லை எனக் கூறியிருந்தார்.

ஆனால், வடகொரியத் தலைவர் கிம், ஏவுகணைகள் தொடர்பாகவோ அல்லது நாட்டின் அணுவாயுதச் செயற்பாடுகள் தொடர்பாகவே, நேரடியான கருத்தெதனையும் வெளியிட்டிருக்கவில்லை. மாறாக, இறுதியாக ஏற்பட எதிர்பார்க்கப்படும், அணுவாயுதமழிப்புப் பற்றியே, அவரது கவனம் காணப்பட்டது. இவற்றுக்கு மத்தியில் தான், புலனாய்வுத் துறையின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

புலனாய்வுத் துறையின் இவ்வறிவிப்பு, கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்த, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. அணுவாயுதம் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்வதை, வடகொரியா தொடர்ந்து வருகிறது என, அவர் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .