2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.அமெரிக்கத் தாக்குதல்களில் 3,000 பொதுமக்கள் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான தாக்குதல்களை, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது முதல் இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அக்கூட்டணியின் தாக்குதல்களில் சிக்கிக் கொல்லப்பட்டுள்ளனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிராக, சிரியாவிலும் ஈராக்கிலும் தாம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையில், 1,000க்கும் சற்று அதிகமான பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கும் ஐ.அமெரிக்கா, பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு, தம்மாலியன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, ஈராக்கிலும் சிரியாவிலும், ஏராளமான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, தமது அரசொன்றை நிறுவியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டில், ஈராக் மீதான தாக்குதல்களை, ஐ.அமெரிக்கக் கூட்டணி ஆரம்பித்திருந்தது. அதே ஆண்டு செப்டெம்பரில், சிரியா மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையிலேயே, ஐ.அமெரிக்கக் கூட்டணியால் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், இதுவரை 3,331 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவுக்குள் காணப்படும் தகவல் மூலங்கள், விமானப் பறப்பு விதங்கள், தாக்குதல்களில் ஈடுபட்ட விமானங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களை யார் நடத்தினர் என்பதைத் தீர்மானிப்பதாக, கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.

இதனடிப்படையிலேயே, ஐ.அமெரிக்கக் கூட்டணியின் தாக்குதல்களாலேயே 3,331 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்த, கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் றமி அப்டெல் ரஹ்மான், அவர்களுள் 826 சிறுவர்களும் 615 பெண்களும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .