2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்காவிடமிருந்து ஈரானுக்கு கடும் நிபந்தனைகள்

Editorial   / 2018 மே 23 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடுதல், சிரிய சிவில் யுத்தத்தில் தலையிடுவதிலிருந்து விலகுதல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் பலவற்றை, ஈரானுக்கு விதித்துள்ள ஐக்கிய அமெரிக்கா, அவற்றின்படி நடக்காவிட்டால், கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென எச்சரித்துள்ளது. ஈரானை எதிர்கொள்ளும் விடயத்தில், கடுமையான போக்கையே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் கடைப்பிடிக்கும் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட அணுவாயுதத் திட்டங்கள் தொடர்பில் வெளிப்படுத்துதல், பாரநீர் இயந்திரத்தை மூடுதல் உள்ளிட்ட யுரேனியம் செறிவாக்கலை நிறுத்துதல், முழு நாட்டிலுமுள்ள இடங்களுக்கும் ஐ.நாவின் அணுவாயுத முகவராண்மை செல்வதற்கு இடமளித்தல், ஏவுகணைச் சோதனைகளையும் அதன் சோதனைகளையும் நிறுத்துதல், கைதுசெய்யப்பட்டுள்ள ஐ.அமெரிக்கப் பிரஜைகளையும் அதன் தோழமை நாடுகளினதும் பிரஜைகளையும் விடுவித்தல், ஹிஸ்புல்லா உள்ளிட்ட மத்திய கிழக்கிலுள்ள “பயங்கரவாத” குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல், ஹூதி ஆயுததாரிகளுக்கான இராணுவ உதவியை நிறுத்துதல், சிரியாவிலிருந்து ஈரான் படைகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐ.அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் உரையாற்றிய, அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, தமது நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொள்ளாவிட்டால், “வரலாற்றில் மிகவும் கடுமையான தடைகளை” விதிக்கப் போவதாகவும், வெளிநாடுகளிலுள்ள ஈரானின் இயங்குநர்களை “நசுக்க” போவதாகவும் எச்சரித்தார்.

ஐ.அமெரிக்காவின் இக்கோரிக்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளுமாயின், மத்திய கிழக்கிலிருந்து மத்திய தரைக்கடல் வரை, ஈரான் கொண்டுள்ள இராணுவ, அரசியல் ஆதிக்கங்களிலிருந்து பின்வாங்க வேண்டிய தேவை, ஈரானுக்கு ஏற்படும்.

ஐ.அமெரிக்காவில் இதற்கு முன்னர் காணப்பட்ட பராக் ஒபாமாவின் நிர்வாகம், ஈரான் மீது தடைகளை விதித்தாலும், பின்னர், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிர்வாகம், ஈரான் மீது மோதல் போக்கான கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. அதனடிப்படையிலேயே, இராஜாங்கச் செயலாளரின் இந்நிபந்தனைகளும் அமைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .