2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.அமெரிக்காவும் துருக்கியும் சிரியாவில் மோதும்?

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் துருக்கி மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கு, அந்நாடு எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கும் துருக்கிப் படைகளுக்கும் இடையில், நேரடியான மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிரிய - துருக்கி எல்லையில் அமைந்துள்ள அஃப்ரின் மாகாணத்திலேயே, குர்திஷ் போராளிகளுக்கு எதிரான முதலாவது நடவடிக்கை, கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குர்திஷ் போராளிகள் நிலைகொண்டுள்ள மன்பிஜ் பகுதி மீதும் தாக்குதல் நடத்துவதற்கு, துருக்கி தயாராகி வருகிறது.

மன்பிஜ் பகுதி, அஃப்ரினிலிருந்து 100 கிலோமீற்றர்கள் கிழக்காகக் காணப்படுவதோடு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக, ஐக்கிய அமெரிக்கப் படையினரும் அங்கு காணப்படுகின்றனர். எனவே, குர்திஷ்கள் மீதான நடவடிக்கை முன்னெடுக்கப்படின், நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில், நேரடியான மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. மன்பிஜ்ஜில் நிலைகொண்டுள்ள ஐ.அமெரிக்காவின் கூட்டணிப் பிரிவு கருத்துத் தெரிவிக்கும் போது, தமக்கெதிரான தாக்குதல்களை எதிர்க்கும் உரிமை தமக்குள்ளது எனவும், அவ்வாறு பதில் தாக்குதல்களை நடத்துவதற்குத் தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, மன்பிஜ்ஜில் மேற்கொள்ளப்படக் கூடிய தாக்குதலை எதிர்ப்பதற்கு, தாமும் தயாராக இருப்பதாக, குர்திஷ்கள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்றவாறு, தமது படைகளையும் அவர்கள் தயார்படுத்தியுள்ளனர்.

எனவே, அஃப்ரினுடன் ஒப்பிடும் போது, மன்பிஜ்ஜில் மேற்கொள்ளப்படக் கூடிய தாக்குதல்கள், அதிக ஆபத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இதன் ஆபத்தைப் புரிந்துகொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்கப் படைகளும் துருக்கிப் படைகளும், ஒன்றுடனொன்று மோதிக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, கவனமாகச் செயற்படுமாறு, துருக்கியிடம் அவர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .