2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.அமெரிக்காவும் பாகிஸ்தானும் முரண்படுமா?

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அம்பியூலன்ஸ் தாக்குதலை, ஹக்கானி வலையமைப்பே மேற்கொண்டது என, ஐக்கிய அமெரிக்கா உறுதியாக நம்புகிறது என அறிவிக்கப்படுகிறது. இது, ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஹக்கானி வலையமைப்பு, தலிபான்களுடன் தொடர்பைக் கொண்டது. அதேபோன்று, ஹக்கானி வலையமைப்புக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் அந்நாட்டு இராணுவக் கட்டமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்ற என்பது, பல ஆண்டுகளாகக் காணப்படும் குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க இராணுவத்தின் பேச்சாளர்களுள் ஒருவரான கப்டன் டொம் கிரெஸ்பக், “கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டு, 103 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், தலிபான் ஹக்கானி வலையமைப்புக் காணப்படுகிறது என நாம் உறுதியுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மஹ்மூட் சைக்கல் கருத்துத் தெரிவிக்கும் போது, இத்தாக்குதலை நுட்பமானது என வர்ணித்ததோடு, தலிபான் குழுவால் இது நடத்தப்பட வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.

அத்தோடு அவர், பாகிஸ்தானிலிருந்தே இத்தாக்குதல்கள் வருகின்றன என்ற, தனது வழக்கமான கருத்தையும் மீள வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்துக்கான பாதுகாப்பு இடமாகச் செயற்படுகிறது எனக் குற்றஞ்சாட்டி, பாகிஸ்தானுக்கான உதவிகளை, ஐ.அமெரிக்கா ஏற்கெனவே இடைநிறுத்தி வைத்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை, அந்நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனக் கருதப்படுகிறது.

அதேபோன்று, இந்த விடயங்களுக்காக, பாகிஸ்தானைக் கட்டுப்படுத்துவது குறித்த திட்டங்களையும், ஐ.அமெரிக்கா வகுத்து வருகிறது என, தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டால், இரு நாடுகளுக்குமிடையில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள உறவுகள், மேலும் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .