2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி வருத்தமடைவு

Editorial   / 2018 மே 10 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்தமை குறித்து வருத்தமும் கவலையும் அடைவதாக, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள், கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவைத் தொடர்ந்து, ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடனும் ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலுடனும், தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார்.

அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், “இவ்வொப்பந்தம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்க வேண்டுமென்பதில், எமது அரசாங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. எஞ்சியுள்ள ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடி, இவ்வொப்பந்தம் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்வோம். இவ்வொப்பந்தத்துடன் தொடர்புடைய, ஈரான் மக்களுக்குக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை உறுதிசெய்வதும் அதற்குள் உள்ளடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டது.

இதில் குறிப்பாக, ஈரான் ஒப்பந்தத்தை இல்லாது செய்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகள் நடைமுறைக்கு வருமென்பதால், ஈரானுடன் வர்த்தகங்களில் ஈடுபடுகின்ற ஏனைய நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வறிக்கையில், “ஏனைய தரப்புகள், இவ்வொப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதைத் தடைசெய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என, ஐ.அமெரிக்காவிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, இம்மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும், அடுத்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என, பின்னர் வெளிவந்த இன்னோர் அறிக்கை உறுதிப்படுத்தியது. வெளிநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் இம்முடிவு, பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஐ.அமெரிக்காவுக்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டு, ஜனாதிபதி ட்ரம்ப்புடன், இது தொடர்பில் விரிவான பேச்சுகளை நடத்தியிருந்தார்.

அப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக, ஈரான் ஒப்பந்தத்திலிருந்து விலகும் நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அவர் விலகுவதாக அறிவித்திருக்கின்றமை, ஜனாதிபதி மக்ரோனின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .