2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.எஸ்-இடமிருந்து வீழ்ந்தது குவாடிசியா மாவட்டம்

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்-குவாடிசியா மாவட்டத்தைக் கைப்பற்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் சிரியத் தலைநகரான றக்காவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிராக தாம், நேற்று  (25) முன்னேறியுள்ளதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும், குர்திஷ், அரேபியக் குழுக்களை உள்ளடக்கிய சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்துள்ளன.  

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை, றக்காவுக்குள் தனிமைப்படுத்தும் நீண்டகால நடவடிக்கையொன்றைத் தொடர்ந்து, றக்கா மீதான தமது தாக்குதலை, சிரிய ஜனநாயகப் படைகள் ஆரம்பித்திருந்தன.   

மூன்று நாட்கள் கடும் மோதலைத் தொடர்ந்து, றக்காவின் மேற்கிலுள்ள குவாடிசியாவை, சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றின என, தமது அதிகாரியொருவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்துள்ளன.   

கடந்த 18 மாதங்களாக, வடக்கு சிரியாவிலுள்ள இடங்களிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை, சிரிய ஜனநாயகப் படைகள் விரட்டியிருந்தன. இதுதவிர, துருக்கியால் ஆதரவளிக்கப்படும் சிரியப் போராளிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து இடங்களைக் கைப்பற்றியதுடன், பாலைவனப் பகுதிகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதகுழுவுக்கெதிராக, சிரிய இராணுவம் விரைவாக முன்னேறியிருந்தது.   

றக்கா நடவடிக்கை முழுவதும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைவர்களுக்கெதிரான தாக்குதல்கள் உட்பட, ஆட்லறி, விமானத் தாக்குதல்கள் மூலம், சிரிய ஜனநாயகப் படைகளுக்கு, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஆதரவளித்திருந்தது.   

கூட்டணியின் விமானத் தாக்குதல்களில், பஹ்ரேனிய மதகுருவான, துர்கி பினாலி, இம்மாதம் கொல்லப்பட்டிருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் உயர் மத அதிகாரியான பினாலி, வளைகுடாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் அறியப்பட்ட சிரேஷ்ட அதிகாரி ஆவார்.   

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு, முக்கியமான நிதியளிப்பாளரான ஃபவாஸ் அல் றாவியை, சிரியாவில் நடாத்திய விமானத் தாக்குதலொன்றில், கடந்த வாரம் கொன்றதாகக் கூட்டணி தெரிவித்திருந்தது.   

எவ்வாறெனினும், கூட்டணியின் விமானத் தாக்குதல்களால், பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.   

இவ்வாண்டில், றக்காவினுள்ளேயும் றக்காவைச் சுற்றியும் மேற்கொள்ளப்பட்ட கூட்டணியின் தாக்குதல்களால், ஏறத்தாழ 700 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, கண்காணிப்பகம், நேற்று முன்தினம் (24) கூறியுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .