2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஈராக்கில் தோல்வி; சிரியாவில் முன்னேற்றம்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆதிக்கம் பெருமளவுக்கு வீழ்ச்சியடைவதை உறுதிப்படுத்துவது போல, தமது நாட்டிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது என, ஈராக்கியப் பிரதமர் ஹைடர் அல்-அபாடி, நேற்று முன்தினம் (09) உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால் அதேநேரத்தில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில், அக்குழு முன்னேற்றமடைந்துள்ளது என, சிரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டில், ஈராக்கின் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக, தொடர்ச்சியாகத் தமது கட்டுப்பாட்டை இழந்து வந்தது. சிரிய - ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள பகுதியிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் காணப்பட்ட நிலையில், அந்தப் பகுதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, தொலைக்காட்சி உரையொன்றின் மூலமாக விடுத்த பிரதமர் ஹைடர் அல்-அபாடி, “கௌரவமிக்க ஈராக்கியர்களே, உங்களது நிலம், முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்கான கனவென்பது, தற்போது நியமாகியுள்ளது. கடினமான ஓர் இலக்கை, நாங்கள் அடைந்துள்ளோம். ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் இறுதிக் கட்டளைப் பகுதிகளை, எமது நாயகர்கள் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையை (நேற்று) தேசிய விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்திய அவர், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாளாக இது அமையுமெனத் தெரிவித்தார்.

நிலப்பரப்புகள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பதுங்கியிருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் இனிமேல் நடத்தப்படுமென அஞ்சப்படுகிறது.

இரு ஒருபுறமிருக்க, சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்ததுடன், அங்கிருந்தும் அக்குழு முழுமையாகத் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில், எதிரணிப் போராளிகளுடன் மோதிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, அங்கு நிலப்பரப்புகளைக் கைப்பற்றியுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அப்பிராந்தியத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் குழு வெளியேற்றப்பட்டு சுமார் 4 ஆண்டுகளின் பின்னர், இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது, சிரியாவில் அக்குழு இன்னமும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்குப் பின்னரான சிரியா பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ள போதிலும், முதலில் அக்குழு முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, அண்மைய முன்னேற்றங்கள் வெளிப்படுத்துகின்றன எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .