2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியது ஐ.அமெரிக்கா

Editorial   / 2018 ஜூன் 21 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. அப்பேரவையை, பாசாங்கு மிக்கது எனவும் தன்னைப் பற்றி மட்டுமே கவனம் கொண்டது எனவும் வர்ணித்த ஐ.அமெரிக்காவின் இம்முடிவு, மனித உரிமைகளை உலகம் முழுவதிலும் கொண்டு செல்வதற்குத் தடங்கலாக அமையுமெனக் கருதப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இஸ்‌ரேலுக்கெதிரான பாகுபாடான வெறுப்பைக் கொண்டிருக்கிறது எனவும், சீர்திருத்தங்களுக்கு முயலவில்லை என்பதும், ஐ.அமெரிக்கா தெரிவித்த உடனடிக் காரணங்களாகும்.

ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ அருகிலிருக்க உரையாற்றிய ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, மனித உரிமைகள் பேரவையை மறுசீரமைக்கத் தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு, ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து ஆகிய நாடுகள் தடையாக இருந்தன எனத் தெரிவித்து, கடுமையாக விமர்சித்தார். அதேபோல், தாங்கள் கொண்டிருக்கும் விழுமியங்களைக் கொண்டிருக்கும் நாடுகள், இப்பேரவையில் தாங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டுமெனக் கூறின எனத் தெரிவித்த அவர், எனினும் அந்நாடுகளும், இருக்கும் நிலைமையை மாற்றுவதற்கு முயலவில்லை எனவும் விமர்சித்தார்.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு ஐ.அமெரிக்கா எடுத்த இம்முடிவு, தற்போதைய நிர்வாகத்தின் கீழ், பூகோள அமைப்புகள் அல்லது ஏற்பாடுகளிலிருந்து தனித்திருக்கும் நிலைப்பாட்டைக் காட்டுகிறது. ஏற்கெனவே, காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்படிக்கையிலிருந்தும், ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்தும், ஐ.அமெரிக்கா விலகியிருந்தது.

நிக்கி ஹேலியின் உரையில், வெனிசுவேலா, சீனா, கியூபா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய உறுப்பு நாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படை உரிமைகளுக்கான மரியாதை இல்லாத நிலைமை, உறுப்பு நாடுகளில் காணப்படுகிறது என்றார். ஆனால் அவரது இப்பட்டியலில், சவூதி அரேபியாவை அவர் உள்ளடக்கியிருக்கவில்லை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, அந்நாட்டை, உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற முயற்சிகள் முன்னைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மனித உரிமைகள் பேரவையில், இஸ்‌ரேலுக்கெதிரான பாகுபாடு காணப்படுகிறது என, தற்போதைய நிர்வாகத்தால் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதை மீண்டும் வலியுறுத்திய ஹேலி, “இப்பேரவை, அரசியல் பாகுபாட்டாலொழிய, மனித உரிமைகளால் ஊக்குவிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .