2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.நா முகவராண்மைகளுக்கான நிதியை ஐ.அமெரிக்கா நிறுத்தும்?

Editorial   / 2018 மே 25 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் இரண்டு முகவராண்மைகளுக்கும் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான கண்காணிப்பு அமைப்புக்குமான நிதியுதவிகளை நிறுத்துவது தொடர்பாக, ஐக்கிய அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. இவ்வமைப்புகளில், பலஸ்தீனம் இணைந்துகொண்டதைத் தொடர்ந்தே, இவ்விடயம் தொடர்பில் ஐ.அமெரிக்கா ஆராய்கிறது.

சர்வதேச ரீதியாக தமது பலத்தை அதிகரிக்கும் நோக்கில், ஐ.நா வர்த்தக அபிவிருத்தி அமைப்பு, தொழிற்றுறை அபிவிருத்தி முகவராண்மை ஆகியவற்றோடு, இரசாயன ஆயுதங்களுக்கான சமவாயத்திலும், பலஸ்தீனம் இணைந்துள்ளது.

ஆனால், ஐ.அமெரிக்காவின் சட்டப்படி, ஐ.நா அமைப்புகளிலோ அல்லது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களிலோ, முழுமையான அங்கத்துவத்தைப் பலஸ்தீனம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஐ.நாவில் பலஸ்தீனத்துக்கு, பார்வையாளர் அந்தஸ்தே காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஐ.நா அமைப்புகளில் பலஸ்தீனம் இணைந்துள்ள நிலையில், “சர்வதேச அமைப்புகளில் இணைவதற்குப் பலஸ்தீனம் மேற்கொள்ளும் முயற்சிகள் காலத்துக்கு முன்பானவையாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன என்பதும், ஐ.அமெரிக்காவின் தொடர்ச்சியான கருத்தாக இருந்துவருகிறது” என, ஐ.அமெரிக்க அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

ஐ.அமெரிக்காவுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில், அண்மைக்காலத்தில் காணப்பட்டுவரும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே, இவ்விடயமும் இடம்பெற்றுள்ளது.

எனினும், இதற்கு முன்னரும் இது இடம்பெற்றுள்ளது. கலாசாரம், கல்வி தொடர்பான ஐ.நா அமைப்பான யுனெஸ்கோவில், 2011ஆம் ஆண்டு பலஸ்தீனம் இணைந்தபோது, அவ்வமைப்புக்கான நிதியளிப்பில் ஒரு தொகுதியை, ஐ.அமெரிக்கா நிறுத்தியிருந்தது. பின்னர் கடந்தாண்டில், அவ்வமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறியிருந்தது.

அதேபோல், பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகவராண்மைக்கான நிதியுதவிகளை, தற்போதைய ஐ.அமெரிக்க நிர்வாகம், கடந்தாண்டில் நிறுத்தியிருந்தது. இது, அம்முகவராண்மைக்குப் பெரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X