2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐக்கிய அமெரிக்காவில் சவுதி இராணுவ பயிற்சி நிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சவுதி அரேபிய இராணுவத்தினர் அனைவரினதும் செயற்பாட்டுப் பயிற்சியை மறு அறிவித்தல் வரை தாம் நிறுத்துவதாக ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

புளோரிடாவிலுள்ள தளமொன்றில், சவுதி அரேபிய வான்படை லெப்டினனொருவர் மூவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இச்சூடானது, சவுதி அரேபியாவுடனான ஐக்கிய அமெரிக்க இராணுவ உறவைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

புளோரிடாவின் பென்சகோலாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க கடற்படைத் தளத்தைத் தாக்கும்போது சவுதி வான்படையின் 21 வயதான இரண்டாம் லெப்டினன்டான மொஹமட் சயீட் அல்ஷமரனி தனித்தே செயற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க விசாரணையாளர்கள் நம்புவதாக மத்திய விசாரணை முகவரகம் (எப்ஃ.பி.ஐ) தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த அறிவிப்பானது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சவுதி அரேபிய இராணுவத்தினர் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில், பாதுகாப்பின் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய இராணுவ விமான மாணவர்களை தரையிறக்குவதும் உள்ளடங்குகின்றது.

இதேவேளை, இந்த அறிவிப்பானது, ஆங்கில மொழி வகுப்புகள் உள்ளடங்கலான வகுப்பறை பயிற்சி தவிர்ந்த காலாட்படை இராணுவத்தினர் மற்றும் ஏனைய சவுதி அரேபிய பயிற்சிகளையும் பாதிப்பதாக ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அமெர்க்காவிலுள்ள 5,000 சர்வதேச இராணுவ மாணவர்களில் சிலருக்கு பொருந்தக்கூடிய பரவலான பாதுகாப்புச் சோதனை மீளாய்வு நடத்தும் பொருட்டே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இத்தீர்மானம் குறித்து அறிவிக்கும்போது சிரேஷ்ட ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது, சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள 850 மாணவர்களுக்கே பிரயோகிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .