2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒபாமாவுக்கும் ஹிலாரிக்கும் குண்டுகள் அனுப்பிவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் நிலைமை, மிகவும் துருவப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், ஜனநாயகக் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள், சி.என்.என் ஊடகம் ஆகியவற்றுக்கு, குழாய்க் குண்டுகள் எனக் கருதப்படும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டமை, பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஐ.அமெரிக்க அதிகாரிகள், நேற்று (25) தெரிவித்தனர்.

ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தல், நவம்பர் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில், ஜனநாயகக் கட்சிக்கு முன்னேற்றம் ஏற்பட்டு, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபையையோ அல்லது செனட்டையோ அல்லது இரண்டையுமோ, அக்கட்சி கைப்பற்றுமாயின், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரு கட்சியினரும், உச்சக்கட்டமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடீஸ்வரரான ஜோர்ஜ் சொரொஸ் என்பவரே, முதலில் இலக்குவைக்கப்பட்டிருந்தார். சந்தேகத்துக்கிடமான குறித்த பொதி, திங்கட்கிழமை அனுப்பப்பட்டிருந்தது. சொரொஸ், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவானர் என்பதோடு, உலகம் முழுவதிலும், ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்காக, ஏராளமான அன்பளிப்புகளை வழங்குவதில் அறியப்பட்டவர்.

அதன் பின்னரே, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி, சி.ஐ.ஏ-இன் முன்னாள் பணிப்பாளரும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் கடுமையான விமர்சகருமான ஜோன் பிரென்னன், செனட்டர்கள் சிலர், ஜனாதிபதி ட்ரம்ப்பின் சட்டமா அதிபரான எரிக் ஹோல்டர் ஆகியோரும், ஜனாதிபதி ட்ரம்ப் மீது, விமர்சனமான செய்திகளை வெளியிடுகிறது என, ஜனாதிபதியால் குற்றஞ்சாட்டப்படும் சி.என்.என் ஊடகமும், இலக்குவைக்கப்பட்டிருந்தது.

அனுப்பப்பட்டவர்கள் யாரென்பதை, அடுத்த சில நாள்களில் கண்டுபிடிக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்ட அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்தனர்.

இதுவரை வெளியான தகவல்களின்படி, நியூயோர்க், வொஷிங்டன், புளோரிடா ஆகிய பகுதிகளுக்கு, முக்கியஸ்தர்களை இலக்குவைத்த பொதிகள், ஆகக்குறைந்தது 8 அனுப்பிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .