2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்கில் பங்குகொள்வார் ஜப்பானின் அபே

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில், தான் பங்குபெறவுள்ளதாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார். தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக, அவர் பங்குபற்ற மாட்டார் என முன்னர் கருத்துகள் எழுந்திருந்த நிலையிலேயே, பிரதமர் அபேயின் கருத்து வெளியாகியுள்ளது.

போர்க் காலத்தில், ஜப்பானிய இராணுவத்தினரின் தேவைக்கான, தென்கொரியப் பெண்கள் பயன்படுத்தப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடாக இருக்கிறது. “சுகமளிக்கும் பெண்கள்” என அழைக்கப்படும் இப்பெண்கள், பலவந்தமான பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, 2015ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று ஏற்பட்டிருந்தாலும், அது போதாது எனவும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்னமும் பணியாற்றப்பட வேண்டுமெனவும், தென்கொரியா கூறுகிறது. மறுபக்கமாக, அப்பெண்களுக்காகத் தென்கொரியாவில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை அகற்ற வேண்டுமென, ஜப்பான் கோருகிறது. பொது அமைப்புகளால் அவை நிறுவப்பட்டதால், அவற்றை அகற்ற முடியாது என, தென்கொரியா தெரிவிக்கிறது.

இவ்வாறு, இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு காணப்படும் நிலையில், குளிர்கால ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் அபே பங்குபற்றக் கூடாது என, ஜப்பானில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எனினும், இது தொடர்பாக நேற்று (24) கருத்துத் தெரிவித்த பிரதமர் அபே, இது தொடர்பில் ஜப்பானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக, சந்திப்பொன்றை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று, வடகொரியப் பிரச்சினை தொடர்பாக, இவ்விஜயத்தின் போது ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட, பிரதமர் அபே வருகை தரவுள்ளார் என்ற தகவலை, தென்கொரியா வரவேற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .