2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடந்தாண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தாக்குதல்களும் அதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும், அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்தாண்டில் வீழ்ச்சியடைந்தன என, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

2016ஆம் ஆண்டுக்கான, பயங்கரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கை, அத்திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்தாண்டில், 11,072 பயங்கரவாதத் தாக்குதல்கள், உலகம் முழுவதிலும் இடம்பெற்றன. அவற்றின் விளைவாக, 25,600 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 6,700 பேர், தாக்குதல்களை நடத்தியவர்களாவர். 

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2015ஆம் ஆண்டில், பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை, 9 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதேபோல், உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டில், ஈராக்கில் 20 சதவீதம் அதிகமான தாக்குதல்களை மேற்கொண்ட அக்குழு, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 69 சதவீதம் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. 

கடந்தாண்டில், 104 நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. ஆனால், பெரும்பாலான தாக்குதல்கள், ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகியன நாடுகளிலேயே இடம்பெற்றன. உயிரிழப்புகளில் சுமார் 75 சதவீதமானவை, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டன. 

அரச ஆதரவுடன் பயங்கரவாதம் இடம்பெறும் நாடுகளாக, சூடான், ஈரான், சிரியா ஆகியன வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்தோடு, பயங்கரவாதம் இலகுவாகவும் தடைகளின்றியும் செயற்படக்கூடிய இடங்களாக, பல நாடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆசியாவின் தெற்குப் பகுதியில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும், அவ்வாறான நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .