2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்டார் முரண்பாடு: அமைதி காக்குமாறு கோருகிறது ஐ.அமெரிக்கா

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியா தலைமையிலான அரேபிய நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு சம்பந்தமான விவகாரத்தில், இரு தரப்பும், அமைதியான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன் கோரியுள்ளார்.

சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள், கட்டாருடனான உறவைத் துண்டித்ததைத் தொடர்ந்து, அந்த உறவை மீளவும் ஏற்படுத்த வேண்டுமாயின், 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, அண்மையில் கோரியது. அந்தக் கோரிக்கைகளை ஏற்பதற்கு, கட்டார் மறுப்புத் தெரிவித்தது.

இந்தப் பின்னணியில், கட்டாருடனும் சவூதி அரேபியாவுடனும் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட டிலெர்ஸன், இரு தரப்பையும் அமைதி காக்குமாறு கோரியுள்ளார்.
“[13 அம்சக் கோரிக்கைகளில்] சில கோரிக்கைகள், கட்டாரால் நிறைவேற்றப்படுவது கடினமானது என்ற போதிலும், அங்குள்ள கணிசமான பகுதிகள், தற்போது இடம்பெறும் கலந்துரையாடல், தீர்வொன்றை நோக்கிச் செல்வதற்கு அவசியமானவை” என, டிலெர்ஸன் குறிப்பிட்டார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்தும், ஒன்றாக அமர்ந்து, இக்கலந்துரையாடல்களைத் தொடர வேண்டுமெனவும் அவர் கோரினார்.

“எங்களுடைய தோழமை நாடுகளும் நட்பு நாடுகளும், பயங்கரவாதத்தை நிறுத்துதல், தீவிரவாதத்தை எதிர்த்தல் என்ற ஒரே நோக்கத்தை நோக்கிச் செயற்படும் போது, பலமாக இருக்கிறோம் என்பதை, நாம் நம்புகிறோம். தேவையற்ற கருத்துப் பரிமாற்றங்களைக் குறைப்பதும், பதற்றத்தைத் தணிப்பதற்கு உதவும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐ.அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமொன்று, கட்டாரில் அமைந்துள்ள நிலையில், கட்டாரில் காணப்படும் பதற்றமான நிலைமை, ஐ.அமெரிக்காவை நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .