2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்காணிப்பாளர்கள் டூமாவுக்கு இன்று செல்வர்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியிலுள்ள டூமாவில், இரசாயனத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்துக்கு, சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் செல்வது தாமதமாகியிருந்த போதிலும், அவர்கள் இன்று (18) அங்கு செல்லவுள்ளனர். அவ்விடத்துக்குக் கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு, சிரிய, ரஷ்ய அரசாங்கங்கள் முழுமையான உறுதியை வழங்காமையே, தாமதத்துக்குக் காரணமாக அமைந்திருந்தது.

சிரிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இத்தாக்குதல் காரணமாக, ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இத்தாக்குதலை இரசாயனத் தாக்குதல் என்றும் சிரிய அரசாங்கமே நடத்தியது என்றும், மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. மறுபக்கமாக, அவ்வாறான தாக்குதலே இடம்பெறவில்லை என, சிரியாவும் ரஷ்யாவும் கூறுகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக, இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் அதிகாரிகள், நேற்று முன்தினம், டூமாவுக்குச் செல்லவிருந்தனர். ஏற்கெனவே டமாஸ்கஸ்ஸுக்குச் சென்றுள்ள அவர்கள், டூமாவுக்குச் சென்று, ஆய்வு நடத்துவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர்களின் பயணத்துக்கான அனுமதி, ஐக்கிய நாடுகளால் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், டூமாவுக்குச் சென்றால், அங்கு அவர்களுக்குப் பூரண பாதுகாப்பு இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாதென, சிரியாவும் ரஷ்யாவும் கூறியிருந்தன. இதனால், அவர்களின் வருகை, தாமதமாகியிருந்தது.

கண்காணிப்பாளர்களுக்கான பூரண ஒத்துழைப்பை, ரஷ்யாவும் சிரியாவும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை, மேற்குலக நாடுகள் வழங்கியுள்ள நிலையில், மேற்குல நாடுகளின் தாக்குதல்கள் காரணமாகவே, கண்காணிப்பாளர்களை அனுமதிக்க முடியாத நிலை காணப்படுகிறது என, ரஷ்யா கூறியிருந்தது. இந்நிலையிலேயே, அனுமதி வழங்குவதாக, ரஷ்யா இப்போது அறிவித்துள்ளது.

இதேவேளை, ஹொம்ஸ் பகுதி மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை, சிரிய அரசாங்கத் தரப்பின் ஏவுகணை தடுப்புக் கட்டமைப்புகள் தடுத்திருந்த நிலையில், அதை ஐ.அமெரிக்க சார்புத் தரப்புகளா ஏவின என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும், தம்மால் இராணுவ நடவடிக்கையேதும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை என, ஐ.அமெரிக்கா கூறியிருந்தது. இவற்றின் பின்னணியிலேயே, கண்காணிப்பாளர்கள், டூமாவுக்குச் செல்லவுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .