2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கஷொக்ஜி கொலை: ‘சவூதியின் முடிக்குரிய இளவரசரை தொடர்புபடுத்தும் ஆதாரம்’

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய ஊடகவியாளர் ஜமால் கஷொக்ஜியின் கொலையுடன் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானைத் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த ஆதாரமுள்ளதாக நேற்றுத் தெரிவித்துள்ள சட்டத்துக்கு புறமான, விசாரணையில்லாத அல்லது தன்னிச்சையான மரண தண்டனைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு விசாரணையதிகாரி அக்னஸ் கல்லமார்ட், மொஹமட் பின் சல்மானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மீது தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.

சுயாதீன மனித உரிமைகள் நிபுணரான அக்னஸ் கல்மார்ட்டின் அறிக்கையொன்றிலேயே மேற்குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளை இவர் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றபோதும் இவரின் கண்டுபிடிப்புக்களை ஐக்கிய நாடுகளுக்கு பாரப்படுத்துவதுடன், குறித்த வழக்கில் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்ஸை அவர் கோரியுள்ளார்.

அந்தவகையில், ஜமால் கஷொக்ஜி கொல்லப்பட்டதற்கு சவூதி அரேபிய அரசே காரணமென்பது தெளிவாக இருப்பதாக சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாலுள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்னஸ் கல்மார்ட், சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் உள்ளடங்கலாக உயர் மட்ட சவூதி அரேபிய அதிகாரிகளின் தனிப்பட்ட கடப்பாட்டை மேலும் விசாரணைக்குட்படுத்துக்குரிய நம்பத்தகுந்த ஆதாரம் காணப்படுவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அக்னஸ் கல்மார்ட்டின் அறிக்கையை டுவிட்டரில் விமர்சித்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர், குறித்த அறிக்கையானது தெளிவான வேறுபாடுகளையும், கண்டுபிடிக்கப்படாத குற்றச்சாட்டுகளையும் கொண்டிருப்பதாகவும், இந்த அறிக்கையின் நம்பத்தகத்தன்மை குறித்து சந்தேகமெழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் விசாரணையொன்றுக்கான அக்னஸ் கல்மார்ட்டின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அன்டோனியோ குட்டரெஸின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், ஐக்கிய நாடுகளின் சபையொன்றின் ஆணையில்லாமல் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்கும் அதிகாரத்தை அன்டோனியோ குட்டரஸ் கொண்டிருக்கவில்லை எனவும், அதைச் செய்வதற்கான அதிகாரமானது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளிடமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .