2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காபூல் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 என அறிவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள கல்வி நிலையமொன்றுக்கு முன்னால், நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 34 என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று மாற்றியமைத்துள்ளனர் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷியா முஸ்லிம்களின் கல்வி நிறுவனமொன்றே, இத்தாக்குதலின் போது இலக்குவைக்கப்பட்டுள்ளது.

முன்னர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 48 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சில சடலங்கள் இரண்டாகக் கணக்கெடுக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தேஷ்த்-ஈ-பார்ச்சி என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால், மேலும் பலர் காயமடைந்தனர் என, ஆப்கானிஸ்தானின் பொதுச் சுகாதார அமைச்சின் பேச்சாளர்களில் ஒருவரான வஹீட் மஜ்ரூத் தெரிவித்தார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் காவலர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதலாளிகள் காணப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால், ஒருவர் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டார் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர், வாகனங்களில் வராமல், நடந்தே அப்பகுதிக்கு வந்து, தன்னைத் தானே வெடிக்கவைத்துள்ளார்.

அப்பகுதியிலுள்ள சிரேஷ்ட ஷியா தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, கல்வி நிறுவனத்தின் கற்கைநெறியையே, தாக்குதலாளி இலக்குவைத்தார் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார். அக்கற்கைநெறியில், ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கற்று வந்தனர். அவ்வாறு ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் இருப்பதை, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால், இத்தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பதில் தெளிவில்லாத நிலைமையே காணப்படுகிறது. இத்தாக்குதலைத் தாம் மேற்கொள்ளவில்லையென, தலிபான் குழு அறிவித்தது.

அதேநேரத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என நம்புவதாக, ஷியா தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபக்கமாக, தம்மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அண்மைக்காலத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மேல் குற்றஞ்சுமத்திவிட்டு, பொதுமக்கள் மீதான இவ்வாறான தாக்குதல்களை, தலிபான்களே மேற்கொள்கின்றனர் என, ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் ஆசிரியரான அப்துல்லா கென்ஜானி குறிப்பிட்டார்.

அத்தோடு, காபூலில் மாத்திரம், ஷியா இலக்குகளை இலக்குவைத்து, கடந்த 2 ஆண்டுகாலப் பகுதியில், 13 தாக்குதல்கள் மேற்கொள்ளப்படடுள்ளன எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .