2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காஷ்மிரில் வன்முறை; 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் காஷ்மிரில், ஆயுததாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது, இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர்.

காஷ்மிரின் புல்வமா மாவட்டத்தில், ஆயுததாரிகள் தங்கியிருக்கின்றனர் எனக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, நேற்று முன்தினம் (15) காலையில், படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த, இந்திய பாதுகாப்புப் பேச்சாளர் கேணல் ராஜேஷ் காளியா, படையினர் மீது, ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர் எனவும், அதற்கு, பாதுகாப்புப் படையினர் திரும்பத் தாக்கினரெனவும் குறிப்பிட்டார். இந்த மோதலில், மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

ஆயுததாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விடத்தில் மக்கள் ஒன்றுகூடினர் எனவும், அப்போதே பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது என, அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, படையினர் நடத்திய தாக்குதலில், 7 பொதுமக்கள் காயமடைந்ததோடு, மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர் என, சிரேஷ்ட படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயுததாரியொருவரின் சடலத்தை எடுப்பதற்குப் பொதுமக்கள் முயன்றபோதே, மோதல் வெடித்தது எனத் தெரிவித்தார்.

தமது இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹரியாட்  என்ற அந்த ஆயுதக்குழு, நேற்று முதல் 3 நாள்களுக்கு, முழுமையான முடக்கத்துக்கு அழைப்பு விடுத்தது.

மறுபக்கமாக, இந்த முரண்பாடுகள் தொடர்ச்சியாகப் பரவுவதைத் தடுக்கும் முகமாக, காஷ்மிர் பள்ளத்தாக்குக்கான ரயில் சேவைகளை இடைநிறுத்தியுள்ள அதிகாரிகள், அலைபேசி இணையச் சேவைகளையும் முடக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .