2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிர்குக்கை கைப்பற்றியது ஈராக்

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கில் காணப்படும் படைச்சமநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த கிர்குக் நகரத்தை, ஈராக்கிய அரச படைகள் கைப்பற்றியுள்ளன. இது தொடர்பான நடவடிக்கையை, நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பித்திருந்த ஈராக்கியப் படைகள், 24 மணிநேரத்துக்குள், நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.  

ஈராக்கின் குர்திஷ் பிராந்தியம், ஈராக்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, அதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

ஐக்கிய அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட, ஈராக்கின் உயர்தரப் படைப்பிரிவான “பயங்கரவாதத்துக்கு எதிரான படையணி”, இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது, மாகாண அரசாங்கத்தின் தலைமையகத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, அந்நகரம் வீழ்ந்தது.  

இந்த இராணுவ நடவடிக்கையில், எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்து, ஈராக் மத்திய அரசாங்கமோ அல்லது குர்திஷ் பிராந்திய அரசாங்கத் தரப்போ, தகவல்கள் எவற்றையும் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், கிர்குக்கில் பணியாற்றிவரும் உதவி அமைப்பொன்று, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன எனத் தெரிவித்தது. கிர்குக்கின் தெற்குப் பகுதியிலேயே, இருதரப்புக்குமிடையில், சொல்லிக்கொள்ளும்படியான மோதல் இடம்பெற்ற நிலையில், அங்கேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என, அந்த அமைப்புத் தெரிவித்தது.  

எண்ணெய் வளம் மிக்க கிர்குக்கில், எண்ணெய்க் கிணறுகள், இன்னமும் குர்திஷ்களின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. இந்த இராணுவ நடவடிக்கையை ஈராக் முன்னெடுத்தபோது, தமது கட்டுப்பாட்டிலிருந்து அனுப்பப்படும், தினசரி 350,000 பரல்கள் எண்ணெயை, குர்திஷ்கள் நிறுத்தியிருந்தனர். எனினும், அவ்வாறு நிறுத்திவைத்திருந்தால், எண்ணெய்க் கட்டமைப்புகளையும் கைப்பற்றப் போவதாக, ஈராக் எச்சரித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விநியோகம் மீண்டும் ஆரம்பித்தது.  

ஆனாலும், குர்திஷ்களால் எண்ணெய் விநியோகம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகில் எண்ணெயின் விலை அதிகரித்திருந்தது.  

இவற்றுக்கு மத்தியில், எண்ணெய்க் கட்டமைப்புகளை, ஈராக் கைப்பற்றுமா, அவ்வாறாயின் எப்போது கைப்பற்றும் என்ற தகவல், இதுவரை வெளியாகியிருக்கவில்லை.  

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பகுதிகளில், ஈராக்கிய தேசியக் கொடியை ஏற்றுமாறு, பிரதமர் ஹைடர் அல்-அபாடி, பணிப்புரை விடுத்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X