2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கிழக்கு கூட்டாவில் போர்க்குற்றம் புரிந்தது சிரியா’

Editorial   / 2018 ஜூன் 22 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கூட்டாவில் காணப்பட்ட சுமார் 265,000 மக்களை, வேண்டுமென்றே பட்டினிக்குள் தள்ளியதன் மூலம், சிரிய அரசாங்கப் படைகளும் அவர்களோடு இணைந்த துருப்புகளும், போர்க்குற்றங்களிலும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டன என, ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல், அரசாங்கப் படைகளால் முற்றுகை செய்யப்பட்ட கிழக்கு கூட்டா பகுதிக்குள் காணப்பட்ட சுமார் 20,000 எதிரணிப் போராளிகள், தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகில் தாக்குதல்களை மேற்கொண்டதோடு, அதில் கணிசமானோர் கொல்லப்பட்டனர் எனவும், அவையும் போர்க்குற்றங்களாகக் கருதப்பட வேண்டுமெனவும், விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.

சிரியா தொடர்பான ஐ.நா விசாரணைக் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, 140 நேர்காணல்கள், புகைப்படங்கள், காணொளிகள், செய்மதிப் படங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கூட்டாவைக் கைப்பற்றுவதற்காக, சிரிய அரசாங்கப் படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள், உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தன. கிழக்கு கூட்டா தொடர்பாக, இவ்வாண்டே அதிக கவனம் ஏற்பட்டிருந்தாலும், ஏப்ரல் 2013இலேயே, அப்பகுதியைச் சூழ்ந்திருந்தன.

அதன் பின்னர், போராளிகளையும் பொதுமக்களையும், ஒரே மாதிரியாகவே, சிரிய அரசாங்கப் படைகள் கருதின எனவும், இவ்வாண்டு பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை, அப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், “அடிப்படையில் சட்டரீதியற்றவை” எனக் குறிப்பிட்ட அவ்வறிக்கை, இறுதிக் கட்டத்தில், “சரணடை அல்லது பட்டினியில் வாடு” என்ற கொள்கையைத் தான், அப்படைகள் பின்பற்றின எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் வசித்து வந்த இடங்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன எனத் தெரிவித்த அவ்வறிக்கை, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல், திட்டமிட்ட நடவடிக்கையாகத் தென்படுகிறது எனவும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X