2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குகைக்குள் சிக்கியோரை எப்படி மீட்பதென்பதில் முடிவில்லை

Editorial   / 2018 ஜூலை 05 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தால் நிறைந்துள்ள குகைத் தொகுதிக்குள் இருந்து, 12 சிறுவர்களையும் அவர்களின் பயிற்றுநரையும் எவ்வாறு மீட்பதென்பது தொடர்பில், தாய்லாந்து மீட்பாளர்கள், இன்னமும் முடிவொன்றை எடுத்திருக்கவில்லையென அறிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் றாய் மாகாணத்திலுள்ள குகைக்குள் சென்ற பின்னர், 9 நாட்களாகத் தொடர்பற்று இருந்த அவர்களுடன், இவ்வாரத்தில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின்னரும் கூட, அவர்களை எவ்வாறு மீட்பதென்பது தொடர்பில், இன்று (05) வரை முடிவு காணப்பட்டிருக்கவில்லை.

அவர்களை மீட்கவேண்டிய குகைப் பகுதிக்குள் வெள்ளநீர் காணப்படுவதோடு, சிறுவர்களுக்கு நீந்தத் தெரியாது என்பதால், அவர்களுக்கு நீச்சல் பழக்கப்படுகிறது. அத்தோடு, அவர்கள் தொடர்ந்தும் அப்பகுதிக்குள் இருக்கும் வரை, அவர்களுக்குத் தேவையான உணவும் ஏனைய உதவிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எவ்வாறு அவர்களை மீட்பது என்ற விடயத்தில், குகைப் பகுதிக்குள் காணப்படும் வெள்ளநீர் வற்றும் வரை காத்திருப்பதென்ற விடயமும் ஆராயப்படுகிறது. ஆனால், தாய்லாந்தின் மழைக் காலம் முடிவடைவதற்கு, இன்னமும் சுமார் 4 மாதங்கள் உள்ளனவென்பது, இதில் கவனஞ்செலுத்தப்படும் ஒன்றாக உள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கடற்படையின் பேச்சாளர் ஒருவர், மழைக் காலம் முடியும் வரை, சுமார் 4 மாதங்களுக்கு, குகைக்குள்ளேயே அவர்கள் இருப்பதென்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மறுபக்கமாக, அவர்கள் சிக்கியுள்ள பகுதிக்குள் காணப்படும் வானிலை மாற்றமடையுமாயின், ஒரு சில நாட்களுக்குள் அவர்கள் மீட்கப்பட முடியுமென, ஏனையோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு உதவும் முகமாக, குகைக்குள் காணப்படும் தண்ணீரை வெளியேற்றும் பணியில், மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், குகைக்குள் தண்ணீர் தொடர்ந்தும் சேர்ந்த வண்ணமுள்ளமை, மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இந்த 12 சிறுவர்களும், கால்ப்பந்தாட்ட வீரர்கள் என்பதோடு, அவர்களின் பயிற்றுநரோடு அவர்கள் குகைக்குள் சென்றிருந்த போதே இவ்வாறு சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .