2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குடியேற்றவாசிகளுக்கு உதவினால் குற்றம்

Editorial   / 2018 ஜூன் 22 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்படும் சில உதவிகளை, குற்றங்களாக வரையறுத்து, ஒரு தொகுதி சட்டமூலங்களை, ஹங்கேரி நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மனித உரிமைகள் அமைப்புகளினதும் எதிர்ப்புகளை மீறியே, இது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் ஆட்சிபுரிந்து வரும் வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட பிதமரான விக்டர் ஓர்பன், அண்மையில் இடம்பெற்ற தேர்தலில், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கைகளைப் பிரசாரம் செய்து, மேலும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். 

இந்நிலையிலேயே, சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு வழிவகுக்கும் எச்செயற்பாட்டையும் குற்றமாக்குவதற்கான சட்டமூலத்தை, அந்நாடு நிறைவேற்றியுள்ளது. இது, அகதிக் கோரிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை, முக்கியமான இலக்குவைத்துள்ளது. 

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், உலகம் முழுவதிலும் ஜனநாயகத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் பரோபகாரியுமான ஜோர்ஜ் சொரொஸ், ஐரோப்பாவை நிலைகுலையச் செய்ய வைப்பதற்காகவே, குடியேற்றவாசிகளை ஐரோப்பாவுக்குள் அனுப்பிவருகிறார் என, ஆதாரங்கள் எவற்றையும் குறிப்பிடாமல், பிரதமர் ஓர்பன், குற்றஞ்சாட்டுகிறார். 

அதன் அடுத்த கட்டமாக, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தை, “சொரொஸை நிறுத்தும் சட்டம்” என்றே அவர் அழைக்கிறார். தன்மீதான குற்றச்சாட்டுகளை, சொரொஸ் ஏற்கெனவே நிராகரித்துள்ளார். 

ஏற்கெனவே, இவ்வாறான சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் காணப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியச் சந்திப்புக்கு முன்னதாக, இச்சட்டமூலத்தை ஹங்கேரி நிறைவேற்றியுள்ளமை, அதிக விமர்சனத்துடன் பார்க்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .