2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குவாம் மீதான தாக்குதல் திட்டத்தை ஒத்திவைத்தார் கிம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கப் பிராந்தியமான குவாமுக்கு அருகில், ஏவுகணைத் தாக்குதலை நடத்தும் திட்டத்தை, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் ஒத்திவைத்துள்ளார் என, அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது. ஆனால், ஐ.அமெரிக்காவின் “பொறுப்பற்ற” நடவடிக்கைகள் தொடருமாயின், தாக்குதல் நடத்தப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடகொரியத் தலைவரின் இந்த அறிவிப்பு, வடகொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணித்து, அமைதிக்கு வழிவகுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குவாம் பகுதியைத் தாக்குவதற்கான திட்டம் குறித்து, நாட்டின் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும், எனினும், தாக்குதலைத் தாமதித்தும் முடிவை அவர் எடுத்ததாகவும், அரச ஊடகம் தெரிவித்தது. “அமெரிக்கர்களின் (இழிவுபடுத்தும் சொல்லால் அழைக்கப்பட்டிருந்தது) முட்டாள்தமான நடவடிக்கைகள் சில மேலும் இடம்பெறும் வரை காத்திருந்து, அதன் பின்னர் தாக்குதல் நடத்தப்படும்” என அவர் அறிவித்தார் என்று குறிப்பிடப்பட்டது.  கொரியத் தீபகற்பத்தில், ஆபத்தான, பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஐ.அமெரிக்கா ஈடுபடுமாயின், ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி, தாக்குதல் நடத்தப்படுமென அவர் அறிவித்ததாகவும், கொரியத் தீபகற்பத்தில் இராணுவ முரண்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கு, ஐ.அமெரிக்கா சிறப்பாகச் செயற்படுவது அவசியமானது என்றும் குறிப்பிடப்பட்டது.

குவாம் பிராந்தியம் மீது, 4 ஏவுகணைகளை வீசப்போவதாக, வடகொரியா விடுத்த எச்சரிக்கையிலிருந்து அந்நாடு பின்வாங்கியுள்ளமை, இவ்விடயத்தில் ஐ.அமெரிக்காவுக்கான அழுத்தங்களை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துகளைத் தொடர்ந்தே, இவ்விவகாரம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில், தற்போது, வடகொரியாவே, அமைதிக்கு முயன்ற நாடு என்ற பெயரைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அத்தோடு, தென்கொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி இடம்பெறவுள்ள நிலையில், அதன் மீதும் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .