2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘செங்கடலில் கப்பலை ஹூதிகள் கைப்பற்றினர்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செங்கடலின் தென் முடிவில், தென்கொரிய எண்ணெய்க் கிணறு துளையிடும் சாதனமொன்றை கட்டி இழுத்துச் சென்ற கப்பலை, ஈரானுக்கு ஆதரவளிக்கும் ஹூதிகள் கைப்பற்றியதாக, ஹூதிகளுடன் யேமனில் போரிடும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நேற்று தெரிவித்துள்ளது.

ஆயுதந்தரித்த ஹூதிக்களால் நேற்றுமுன்தினமிரவு கப்பல் கைப்பற்றப்பட்டதாக அறிக்கையொன்றில் கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல்-மல்கி தெரிவித்ததாக சவுதி அரேபிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும், எத்தனை கப்பற் பணியாளர்கள் கப்பலில் இருந்தார்கள் என துர்கி அல்-மல்கி தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தென்கொரியர்களைக் கொண்ட இழுவைப் படகு, மண் தோண்டும் இயந்திரம் என தமது இரண்டு கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.

இதேவேளை, அடையாளந்தெரியாத பிரஜைகளான வேறு நான்கு கப்பல் பணியாளர்களும் கப்பலில் இருப்பதாக அறிக்கையொன்றில் தென்கொரிய வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்குறித்த இரண்டு கப்பல்களும் தென்கொரிய கட்டுமான நிறுவனமான வூங்ஜின் டெவலப்மன்டை ஆளப்படுவதாக அந்நிறுவன அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு தென்கொரியக் கப்பல்களுடன் கைப்பற்றப்பட்ட சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான இழுவைக் கப்பலில் 10 வெளிநாட்டுப் பிரஜைகள் இருப்பதாக தென்கொரிய வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஓமானுக்கு அருகே அரேபியக் கடலில் கடற்கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தென்கொரிய கடற்படைக் கப்பலொன்று, கப்பல்கள் கைப்பற்றப்பட்ட பகுதிக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய வெளிநாட்டமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில், செங்கடலில் சந்தேகத்துக்கிடமான கப்பலொன்றை ஹூதிக் குழுவின் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட ஹூதி அதிகாரியான மொஹமட் அலி அல்-ஹூதி, கப்பல் பணியாளர்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கப்பல், ஆக்கிரமிப்பு நாடுகளைச் சேர்ந்ததா அல்லது தென்கொரிவினதுதான என யேமனிய கரையோரக் காவற்படைகள் சோதிப்பதாகவும், தென்கொரியாவினுடையதாக இருந்தால், சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் என மொஹமட் அலி அல்-ஹூதி கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X