2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சர்ச்சைக்குரிய கட்டுரையை சரிமட்டும் பார்த்தார்’

Editorial   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவின் தலைவராக இருந்த போல் மனஃபோர்ட், நீதிமன்ற உத்தரவை மீறி, வேறொருவரின் பெயரில் எழுதியதாகக் கூறப்படும் கட்டுரையை, அவர் எழுதியிருக்கவில்லை எனக் கூறியுள்ள, அக்கட்டுரையை எழுதியதாகக் கூறப்படும் நபர், ஆனால் அக்கட்டுரையை அவர் பார்த்துச் சரிசெய்தார் என ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் விசேட வழக்குத் தொடுநரான றொபேர்ட் மல்லரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மனஃபோர்ட், விசாரணை தொடர்பாகவோ அல்லது வேறு விடயங்கள் சம்பந்தமாகவோ, ஊடகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வுத்தரவை மீறிய அவர், உக்ரைனின் கியுவ் போஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையை, உக்ரைன் வெளிநாட்டமைச்சின் முன்னாள் பேச்சாளர்களில் ஒருவரான ஒலெக் வொலொஷின் என்பவரின் பெயரில் எழுதினார் என, றொபேர்ட் மல்லரால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ரஷ்யப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய கொன்ஸ்டன்டின் கிலிம்னிக் என்பவரோடு இணைந்து, புனைபெயரில் கட்டுரை எழுதினார் என்பதே, மல்லரின் குற்றச்சாட்டாகும். மனஃபோர்டை நியாயப்படுத்தும் விதமாக, அக்கட்டுரை காணப்பட்டது.

இந்நிலையில், ஒலெக் வொலொஷின் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, தானே இக்கட்டுரை எழுதியதாகக் குறிப்பிட்டார். ஆனாலும், திருத்தம் பார்ப்பதற்காகவே, அது மனஃபோர்டின் கையில் சென்றது எனக் குறிப்பிட்டார்.

“ஏற்கெனவே கடினமான நிலையில் இருக்கும் அவரின் (மனஃபோர்டின்) நிலைமையை, ஏதாவது முட்டாள்தனமாக எழுதி, மேலும் மோசமாக்க விரும்பவில்லை. எனவே நான் அதை கில்ம்னிக்கிடம் அனுப்பினேன். அதை மனஃபோர்டிடம் அனுப்பும் திட்டம், அவருடையது.

“அவர் (கில்ம்னிக்), சில கருத்துகளுடனும் ஆலோசனைகளுடனும் எனக்கு அனுப்பிவைத்தார். அவை, அவருடையனவா, இல்லையெனில் மனஃபோர்டினுடையனவா என்ற கேள்விக்கு, என்னால் பதிலளிக்க முடியாது” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .