2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சவூதியைச் சேர்ந்த 21 பேருக்கு விசா நீக்கம்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் வைத்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 21 பேரின் விசாக்களை இரத்துச் செய்வதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்தோடு, ஜமாலின் கொலை தொடர்பாக, இதுவரை தான் வெளியிட்ட கருத்துகளில் காட்டமான கருத்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

ஜமால் கொல்லப்பட்டு விட்டார் என்பதை சவூதி உறுதிப்படுத்திய பின்னரும், ஜமாலின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் வௌியாகிய பின்னணியிலுமே, ஐ.அமெரிக்காவின் கடுமையான இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கத் திணைக்களத்தில் அறிவிக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் மூலம், குறித்த 21 பேரும், ஏற்கெனவே விசாவைக் கொண்டிருந்தால், அவர்களில் விசாக்கள் இல்லாது செய்யப்படும், இல்லாதுவிடின், எதிர்காலத்தில் அவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, இவ்விடயம் தொடர்பில், ஐ.அமெரிக்காவால் எடுக்கப்படும் இறுதி நடவடிக்கையாக இது இருக்காது என்று உறுதியளித்தார்.

இதேவேளை, இதுவரை காலமும், சவூதியை நியாயப்படுத்தும் பாணியில் உரையாற்றி வந்த ஜனாதிபதி ட்ரம்ப், முதன்முறையாக, “ஜமாலைக் கொல்லும் திட்டத்தில், மிகவும் பிழையான திட்டத்தை, சவூதியைச் சேர்ந்தவர்கள் கொண்டிருந்தனர்” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “அது, மிக மோசமாக நிறைவேற்றப்பட்டது. அதை மூடிமறைப்பதற்கான முயற்சி, வரலாற்றின் மூடிமறைப்புகளில், மிக மோசமான மூடிமறைப்புகளில் ஒன்று” என அவர் தெரிவித்தார்.

இதன்போது அவர், மன்னர் சல்மானுக்கு இதுபற்றி எதுவும் தெரிந்திருக்காது என்ற வகையில் கருத்துத் தெரிவித்தாலும், “முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானே, அனைத்தையும் நடத்துகிறார்” எனக் குறிப்பிட்டமையின் மூலம், இக்கொலைக்குப் பின்னால், முடிக்குரிய இளவசர் காணப்படலாம் என்பதை, முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

என்றாலும், அவருடைய இக்கருத்துகள், இவ்விடயத்தை மூடிமறைப்பதற்கு, சவூதி மேற்கொண்ட முயற்சிகள், ஏன் தவறானவை என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்ததோடு, கொன்றமை தவறு என்ற ரீதியில் அவருடைய கருத்துக் காணப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கத்தக்கது.

அதேபோல், இக்கருத்தைத் தெரிவித்த பின்னர், பத்திரிகையொன்றுக் கருத்துத் தெரிவித்த அவரிடம், இக்கொலைக்கும் சவூதி மன்னர் குடும்பத்துக்கும் இடையில் தொடர்பில்லை என்று கூறப்படுவதை நம்புகிறாரா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களை நம்ப விரும்புகிறேன். அவர்களை உண்மையில் நம்ப விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .