2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’சினாய் குடாநாட்டில் 52 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆங்காங்கே குடிப்பரம்பல் காணப்படும் பாலைவனப் பகுதியான சினாய் குடாநாட்டிலிருந்து ஆயுதக் குழுக்களை வெளியேற்றுவதான இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தமது நடவடிக்கைகளில் ஓரங்கமாக 52 ஆயுததாரிகளை கடந்த சில நாட்களில் தாம் கொன்றதாக எகிப்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சினாய் குடநாட்டின் மேற்கு எல்லையில் உள்நுழைய முயன்ற ஆயுதங்கள், வெடிமருந்துகளுடனான 15 வாகனங்களையும் தெற்கு இராணுப் பிராந்தியத்துக்குள் உள்நுழைய முயன்ற 17 வாகனங்களையும் அழித்ததாக அறிக்கையொன்றில் இராணுவம் நேற்று  அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நடவடிக்கைகளில், வட சினாயிலும் சினாயின் மத்திய பகுதியிலும் ஆயுதப் படைகள், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த தேடுதல்களில் 49 ஆயுததாரிகள் கைதுசெய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சினாய் குடாநாட்டில் அதிகரித்த வன்முறைகளுக்கு காரணமாக குழுக்களை அகற்றும் நோக்கில் இவ்வாண்டு பெப்ரவரியில், பொலிஸ், ஏனைய பாதுகாப்பு படைகளின் உதவியோடு எகிப்திய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், 300க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முதலாவது ஜனாதிபதியான மொஹமட் மோர்சியை 2013ஆம் ஆண்டு இராணுவம் பதவியிலிருந்து அகற்றியதைத் தொடர்ந்தே எகிப்தில் ஆயுதக் குழுக்கள் பிரபலமடைந்தன.

உண்மையான எதிரணியெதுவும் இல்லாமல் இவ்வாண்டு மார்ச்சில் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அப்டெல் பத்தா எல் சிசி, ஆயுதக் குழுக்களை தோற்கடிப்பதையும் பாதுகாப்பை மீளக் கொண்டுவருவதையும் வாக்குறுதியாய் அளித்திருந்தார்.

ஆர்ப்பாட்டங்களையடுத்து 2011ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டதையடுத்து மோசமாக நிலையில் எகிப்து காணப்படுகின்ற நிலையில், எதிர்ப்பாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஜனாதிபதி சிசி அடக்குகின்றார் என அவரின் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மறுபக்கமாக, எகிப்தை நிலைப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் தேவை என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .