2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரிய வெளியேற்றம்: ‘ஐ.அமெரிக்காவிடம் ஒழுங்கான திட்டமில்லை’

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கத் துருப்புகளை மீள அழைக்கும் ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐ.அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில், ஐ.அமெரிக்காவிடம் திட்டமேதுமில்லை என, ஐ.அமெரிக்க இராணுவத்தின் உயரதிகாரியொருவர் விமர்சித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிராகப் போராடும், ஐ.அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கான ஐ.அமெரிக்கத் தலைமைப் பிரதிநிதியாகச் செயற்பட்ட பிரெட் மக்கேர்க், ஜனாதிபதி ட்ரம்ப்பின் இவ்வறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது பதவியிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக என்ன நடக்குமென்பது குறித்துத் திட்டமேதும் இல்லையெனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக, சிரியாவிலுள்ள ஐ.அமெரிக்கத் துருப்புகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

அவரது இக்கருத்து, சிரியாவின் வடக்குப் பகுதி நகரான மன்பிஜ்ஜில், கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 4 அமெரிக்கர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்ட பின்னணியில் அமைந்துள்ளது. சிரியாவில் படை நடவடிக்கைகளுக்காக, 2014ஆம் ஆண்டில் அப்படைகள் தரையிறக்கப்பட்ட பின்னர், அப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலாக இது அமைந்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி, இவ்விடயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டார் -- அதாவது, நாங்கள் வெளியேறுகிறோம். இதன்படி, எங்கள் படைகள், ஒரேயொரு விடயத்தில் மாத்திரம் தெளிவாக இருக்க வேண்டும்: வெளியேறுவது, பாதுகாப்பாக வெளியேறுவது. ஆனால், தற்போது எங்களிடம் திட்டமொன்றில்லை” என்று தெரிவித்த அவர், தமது படைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு மேலதிகமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கான இடைவெளியொன்று அதிகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

அதேபோல், ஐ.அமெரிக்காவால் முடிக்கப்படாத பணிகளை, துருக்கி முடிக்குமென்ற கருத்துகளும் வெளியிடப்படும் நிலையில், மக்கேர்க் அதை நிராகரித்தார். “அது, யதார்த்தபூர்வமற்றது” என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .