2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு ஐ.அமெரிக்கா முஸ்தீபு

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, “பலமான” பதில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இராணுவ ரீதியாக, பல சந்தர்ப்பங்கள் எங்களுக்கு இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

சிரியாவில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த இரசாயனத் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச சமூகத்தின் கலந்துரையாடல்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே, ஐ.அமெரிக்காவின் இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பான ஐ.அமெரிக்காவின் பதில், “மிகக் குறுகிய காலத்தில்” வழங்கப்படுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது தொடர்பான தெளிவான தகவல்களை, ஐ.அமெரிக்கா பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு கூட்டாவின் டூமாவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில், குறைந்தது 49 தொடக்கம் அதிகபட்சமாக 150க்கும் மேற்பட்டோர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்ற போதிலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மருத்துவ தகவல் மூலங்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, உயிரிழந்தோரின் உறுதியான எண்ணிக்கையை அறிவது கடினமாக அமையும் எனக் குறிப்பிட்டன.

இவ்வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அமர்வு, நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு வைத்து, ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் முரண்பட்டிருந்தன.

இதில், இரசாயனத் தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் எனக் குறிப்பிட்ட ரஷ்யப் பிரதிநிதியான வசிலி நெபென்ஸியா, ஐ.அமெரிக்காவால் எடுக்கப்படவுள்ள இராணுவ நடவடிக்கை, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்தார்.

மறுபக்கமாக, சிரிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் ரஷ்யாவின் கைகளில் “சிரியச் சிறுவர்களின் இரத்தம்” காணப்படுகிறது எனத் தெரிவித்த ஐ.அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டை, “பூதம்” என வர்ணித்தார்.

ஏற்கெனவே, சிரிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3 தீர்மானங்களை, ரஷ்யா தனது “வீற்றோ” அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்திருந்த நிலையில், இம்முறையும் வாக்கெடுப்பு இடம்பெறுமாயின், ரஷ்யா அதைத் தடுக்குமென்பது ஓரளவு உறுதியாக உள்ளது.

எனவே, ஐ.நாவில் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாவிட்டால், இராணுவ நடவடிக்கையை நோக்கி, ஐ.அமெரிக்கா செல்லுமென்பதே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .