2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியத் தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், அதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு கூட்டாவை மீளக்கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை, ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவத்தினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர். இலங்கை நேரப்படி நேற்று மாலை வெளியான தகவல்களின் அடிப்படையில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், நேற்று முன்தினம் மாத்திரம், பல்வேறு தாக்குதல்களில் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என, கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதில், காயமடைந்த மக்களுக்கான சிகிச்சையை, உரிய நேரத்தில் வழங்குவதில் தற்போது பிரச்சினை காணப்படும் நிலையில், அதன் காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நேற்று வரை, சுமார் 1,500 பேர் காயமடைந்தனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்குவதில், பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, குறைந்தது 7 வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவை இயங்கவிடாது செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, கிழக்கு கூட்டாவில் ஏற்படும் மரணங்களும் அழிவுகளும் குறித்துக் கவனஞ்செலுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், அந்நிலைமையை, “பூமியிலுள்ள நரகம்” என வர்ணித்தார்.

இதேவேளை, சிரியா தொடர்பான ஐ.நா தீர்மானமொன்றை, சுவீடனும் குவைத்தும் இணைந்து தயாரித்துள்ளன. இதற்கான வாக்கெடுப்பு, இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .