2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சிரியாவை நோக்கி ஏவுகணைகள் வருகின்றன’

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், சிரிய அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் இரசாயனத் தாக்குதல் தொடர்பில், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், சிரியா மீது ஏவுகணைகள் ஏவப்படுமென, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கிழக்கு கூட்டாவின் டூமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இரசாயனத் தாக்குதல் என, பொதுவான கருத்தொற்றுமை காணப்படுகிறது. ஆனால், சிரியாவும் ரஷ்யாவும், இவ்விடயத்தில் மறுப்பை வெளியிட்டு வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில், சிரியா மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமென, ஐ.அமெரிக்கா, ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதற்குப் பதிலளித்த ரஷ்யா, “சிரியா மீது ஏவப்படும் அனைத்து ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்படும்” எனக் கூறியிருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் முகமாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “சிரியா மீது ஏவப்படும் எந்த ஏவுகணையையும் அனைத்து ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தப் போவதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. தயாராக இருங்கள், ரஷ்யா. ஏனென்றால் அவை வருகின்றன. அவை, சிறந்தவையாகவும் புதிதானவையாகவும் புத்திசாலித்தன -மானவையாகவும் காணப்படும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ரஷ்யாவுக்கும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கும் இடையிலான உறவை விமர்சித்த அவர், “தனது மக்களை [நச்சு] வாயுவால் கொல்லும் மிருகம், அதை இரசிக்கும் ஒருவரோடு, நீங்கள் உறவில் இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்துள்ள ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, “புத்திசாலித்தனமான ஏவுகணைகள், பயங்கரவாதிகளை நோக்கித் தான் பறக்க வேண்டும், சட்டரீதியான அரசாங்கங்களை நோக்கியல்ல” எனக் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .