2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சிரியாவை மீண்டும் தாக்கினால் பூகோளரீதியில் குழப்பம்’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியா மீது, மேற்குல நாடுகளால் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுமாயின், பூகோளரீதியிலான குழப்பங்கள் ஏற்படும் என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். சிரியா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதற்கு, ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையிலேயே, ரஷ்யாவின் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிழக்கு கூட்டாவிலுள்ள டூமா நகரின் மீது, சிரிய அரசாங்கப் படைகளால் நடத்தப்பட்டதெனக் கருதப்படும் இரசாயனத் தாக்குதலைத் தொடர்ந்து, சிரிய அரசாங்கத்தின் இரசாயன ஆய்வுகூடம் எனக் கருதப்படும் பகுதி மீது, ஐ.அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகிய இணைந்து, கடந்த சனிக்கிழமை, தாக்குதல் நடத்தியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் தொலைபேசி மூலமாக உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானியும், 7 ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய யுத்தத்துக்கு, அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கான வாய்ப்புகளை, மேற்குல நாடுகள் மேற்கொண்ட தாக்குதல்கள், இல்லாமல் செய்துவிட்டன எனக் குறிப்பிட்டனர் என, ரஷ்யா தெரிவித்தது.

மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டவிரோதமானவை என்ற கருத்தை, ரஷ்யா உள்ளிட்ட சிரியாவின் நட்பு நாடுகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இரு தலைவர்களின் உரையாடலின் போதும், ஜனாதிபதி புட்டின், அதைக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்.

“ஐ.நா ஒப்பந்தங்களுக்கு முரணாக, இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுமாயின், சர்வதேச உறவுகளில் குழப்பங்களை நிச்சயமாக ஏற்படுத்தும் என, விளாடிமிர் புட்டின், முக்கியமாகக் குறிப்பிட்டார்” என, தொலைபேசி உரையாடல் தொடர்பாக, ரஷ்யா வெளியிட்ட அறிவிப்புத் தெரிவித்தது.

இதேவேளை, சிரியாவின் இரசாயன ஆயுதத் திட்டத்துக்கான கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய தடைகளை அறிவிக்கவுள்ளதாக, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இவ்வாறான தடை அறிவிப்பு மூலம், ரஷ்யாவே அதிகம் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .