2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறுமிகளை வன்புணர்ந்தால் மரண தண்டனை

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமிகளை வன்புணர்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத் திருத்தமொன்றை, இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலுள்ள காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற சிறுமி மீதான வன்புணர்வு, கொலை ஆகியவற்றைத் தொடர்ந்தே, இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கொடூரம் தொடர்பாக, போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை எனவும், போதிய கண்டனங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும், பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பான கடுமையான அழுத்தங்களின் மத்தியில், இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று, நேற்று முன்தினம் (21) மாலை இடம்பெற்றது.

இதன்போதே, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்துவோருக்கு, மரண தண்டனை வழங்கும் வகையிலான திருத்தத்தை மேற்கொள்ள, அமைச்சரவை சம்மதித்தது. அதேபோல், இவ்வாறான சிறுமிகள் சம்பந்தப்படும் வழக்குகள், கைதுகள் இடம்பெற்று 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான வன்புணர்வுக்கான தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, 10 ஆண்டுகள் என்ற தண்டனைக் காலத்திலிருந்து, 20 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஏனைய பெண்கள் மீதான வன்புணர்வுகளுக்கான தண்டனைக் காலம், 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இத்தண்டனைகளின் போது, ஆண் சிறுவர்கள் அல்லது ஆண்கள் மீதான வன்புணர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என, றொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது.

இது, அவசர சட்டமாக மாற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் சம்மதத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கையெழுத்து, சம்பிரதாயபூர்வமானதாகவே கருதப்படுகிறது. எனவே, ஓரிரு நாட்களில், இம்மாற்றம் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 6 மாதங்களுக்கே அமுலில் இருக்கவுள்ளது. அதற்கிடையில், நாடாளுமன்றத்தில் சட்டமாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .