2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களை மீட்பதற்காக சென்ற தாய்லாந்து கடற்படை வீரர் பலி

Editorial   / 2018 ஜூலை 06 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர், நேற்று இரவு  உயிரிழந்துள்ளார் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள் சுவாசிப்பதற்காக வாயு சிலிண்டர்களை பொருத்தும்  பணியில்  ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரரே, பலியானார் என, தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கிலோ மீற்றர்  நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர்.

இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றுள்ளார். ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து, அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீரில் மூழகியுள்ளது.

இவர்களை  அணி நிர்வாகம் தேடியுள்ளது. பின்னர், தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.  இவர்களை மீட்பதற்காக, சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு  உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  இருக்கும் இடத்தை  திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்க  மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த  நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குகையிலிருந்து தண்ணீரை வெளியே எடுக்கும் முயற்சியில், மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குகையில் ஒட்சீசனின் அளவு குறைந்து வந்ததால்,  சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள் என குகையினுள் வாயு சிலிண்டர்களை  பொருத்தும் வேளையில், கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவரே, நேற்று பலியாகியுள்ளார்.

இவரது இறப்புக்கு ஒட்சீசன் பற்றாக்குறையே காரணம் என தெரியவந்துள்ளத.

சிறுவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் குகையில் ஒட்சீசனின் அளவு 21 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக  குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்சீசனை அதிகரிக்கும் வேலையிலும், குகையிலிருக்கும் தண்ணீரை  வெளியே எடுக்கும் வேலையிலும்  மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .