2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி மக்ரோனின் அமைச்சரவையில் புதுமுகங்கள்

Editorial   / 2017 ஜூன் 22 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தனது பதவிக் காலத்தின் முதற்சில வாரங்களுக்குள்ளேயே விலகியவர்களை, பெரிதாக அறியப்படாதவர்கள், அரசியலுக்கு வெளியாலுள்ள சிலர் கொண்ட குழுவொன்றின் மூலம், அமைச்சரவைப் பதவிகளில், நேற்று  (21) பிரதியீடு செய்துள்ளார்.   

கடந்த சோஷலிசக் கட்சியின் அரசாங்கத்திலும் பிரெஞ்சின் பாரிய போக்குவரத்து நிறுவனங்களிலும் பணியாற்றிய வர்த்தகரான புளோரன்ஸ் பார்லி, பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சட்ட நிபுணரான நிக்கோல் பெல்லெளபெட், நீதியமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அமைச்சுகளின் அமைச்சர்கள் இருவரும் விலகியதைத் தொடர்ந்தே, அவ்வமைச்சர்களை இவர்கள் பிரதியீடு செய்கின்றனர்.   

இந்நிலையில், விவசாய அமைச்சரான ஜக் மெஸா, பிராந்திய திட்டமிடல் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜனாதிபதி மக்ரோனின் வலது கரமான றிஷா பெரூண்ட் பதவி விலகியமைத் தொடர்ந்து வெற்றிடமான பிராந்திய திட்டமிடல் அமைச்சையே ஜக் மெஸா பெற்றுள்ளார். விவசாய அமைச்சை, ஜனாதிபதி மக்ரோனின் விசுவாசியான, ஸ்டெபனி ட்ரவேர்ட் பெற்றுள்ளார்.   

அரசியல் சம்பந்தப்படாதவர்களாலான, ஜனாதிபதி மக்ரோனின் இந்த அமைச்சரவை மாற்றம், நாடாளுமன்றத்துக்கு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மக்ரோனின் கட்சி அங்கத்தவர்களைப் பிரதிபலிக்கின்றது. இது தவிர, இது, இடதுசாரிக் கொள்கைகள் உடையோரையும் வலது சாரிக் கொள்கைகளை உடையோரையும் சமநிலையில் பேணுவதுடன், அமைச்சரவையில் ஒரு பெண்ணை அதிகமாகவும் கொண்டதாக அமைந்துள்ளது.   

ஐரோப்பிய நாடாளுமன்ற நிதிகளை, ஜனநாயக இயக்கக் கட்சி தவறாகப் பயன்படுத்தியது எனக் கூறப்படுவது தொடர்பில், அக்கட்சியினைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று, தமது பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே, மேற்கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது.   

நீதி அமைச்சரான, ஜனநாயக இயக்கக் கட்சியின் தலைவர் ஸொஸ்ஸுவா பைரு, ஜேர்மனியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் ஜனாதிபதி மக்ரோனின் திட்டத்துக்கு முக்கியமானவரான பாதுகாப்பமைச்சர் சில்வி குலா ஆகியோரே, தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .