2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஜனாதிபதியாக இருப்பதற்கு ட்ரம்ப்புக்குத் தகுதியில்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பதற்கான அற அடிப்படையிலான தகுதி, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குக் கிடையாது என, ஐ.அமெரிக்க புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பால், சர்ச்சைக்குரிய விதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் கோமி, “உயர்ந்த விசுவாசம்: உண்மை, பொய்கள், தலைமைத்துவம்” என்ற தலைப்பில், நூலொன்றை எழுதியுள்ளார். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் ஆகிய 3 ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய அவர், தனது அனுபவங்களை, அதில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தகுதி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப், மருத்துவ ரீதியாகத் தகுதியற்றவர் எனவும், அவருக்கு மறதி ஏற்படுகிறது எனவும், பல்வேறான வதந்திகள் பரவி வரும் நிலையில், “உளரீதியாக அவருக்குத் தகுதியில்லை என்பதையோ அல்லது மறதிநோயின் ஆரம்பக் கட்டம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதியாக இருப்பதற்கு, மருத்துவ ரீதியாக அவருக்குத் தகுதியில்லை என நான் நினைக்கவில்லை. அறரீதியாக அவருக்குத் தகுதியில்லை என நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கல் ஃபிளின் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் கோரினார் என, ஜேம்ஸ் கோமியால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில், ட்ரம்ப்பின் போட்டியாளராக இருந்த ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல் பயன்பாடு தொடர்பான விசாரணைகளின் போது தவறிழைத்தார் எனக் குற்றஞ்சாட்டியே, அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்களோ, கோமியின் நடவடிக்கை காரணமாகவே, ஹிலாரி தோற்றார் எனக் கருதுகின்றனர். தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிலாரியின் மின்னஞ்சல்கள் தொடர்பான புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, கோமி அறிவித்தமையே, அதற்கான காரணமாகும்.

அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள கோமி, அத்தேர்தலில் ஹிலாரி வெற்றிபெறுவார் என்ற பரவலான எதிர்பார்ப்புக் காணப்பட்ட நிலையில், அவ்வெண்ணத்தில் காணப்பட்டமை என்பது, தேர்தலுக்கு அருகில், அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதில் தாக்கம் செலுத்தியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .