2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியின் ‘கண்டனம்’: சமாளித்தது வெள்ளை மாளிகை

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள சார்லொட்டெஸ்வைஸ் நகரத்தில், வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அதன் பின்னர் ஏற்பட்ட வன்முறையும் தொடர்பாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கண்டனம் குறித்த விளக்கத்தை, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் கடும்போக்கு வலதுசாரிகள், நவ நாஸிகள் என, பலரும் ஒன்றுகூடிய போது, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தையும் பலரும் மேற்கொண்ட நிலையில், பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாகக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “அனைத்துத் தரப்புகளையும்” குற்றஞ்சாட்டியிருந்ததோடு, வெள்ளையின ஆதிக்கத்தையோ அல்லது நவ நாஸிஸக் கொள்கைகளைக் கொண்டவர்களையோ கண்டிக்கத் தவறியிருந்தார்.

இதற்கு, கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டன. ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட, கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்ட வெள்ளை மாளிகை, ஜனாதிபதியின் கண்டனத்தில், அனைத்துத் தரப்பினரையும் அவர் கண்டிக்க விரும்பியதாகவும், அதில் நவ நவாஸிஸ குழுக்களும் இனவாதக் குழுவான கு க்ளக்ஸ் க்ளான் குழுவும் உள்ளடங்குகின்றன எனவும் தெரிவித்தது.

ஜனாதிபதி ட்ரம்ப், தனது விடுமுறையைக் களிப்பதற்காக, நியூ ஜேர்சியில் உள்ள கோல்ப் விளையாட்டுத் தளத்தில் காணப்பட்ட போதே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அறிக்கையை யார் வெளியிட்டனர் என்று குறிப்பிடாமல், வெறுமனே “வெள்ளை மாளிகையின் பேச்சாளர்” என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டது. ஆனால், என்ன காரணத்துக்காக, தனது கண்டன உரையிலோ அல்லது அறிக்கையிலோ, வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்துவோரையோ அல்லது நவ நாஸிகளையோ, ஜனாதிபதி கண்டிக்கவில்லை அல்லது பெயர் குறிப்பிடவில்லை என்பதை, அந்த அறிக்கை வெளிப்படுத்தவில்லை.

எனவே, எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், அந்த விமர்சனங்களைக் குறைப்பதற்கான வழியாக இது கருதப்படுகிறதே தவிர, உண்மையிலேயே வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு இதுதானா என்பது, இன்னமும் தெரியப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்கதாக, முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நவ நாஸிகள்” எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக “மருகன் நாஸிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, திருத்தப்பட்ட வடிவம் அனுப்பப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .