2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜமாலின் கொலை திட்டமிடப்பட்டது என ஏற்றது சவூதி

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை, திட்டமிடப்பட்டது என, சவூதி அரேபியா, முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. துருக்கியால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இம்முடிவுக்கு வந்துள்ளதாக, சவூதியின் தரப்பில் நேற்று (25) தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, சவூதி அரச ஊடகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சவூதியின் அரச வழக்குத் தொடுநர், இவ்விடயத்தை வெளிப்படுத்தினார்.

இக்கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், நீதியை நிலைநிறுத்தவுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

சவூதியின் தரப்பில் இப்போது வெளியிடப்பட்ட இக்கருத்து, இவ்விடயத்தில் சவூதியின் கருத்து மாற்றங்களைத் தெளிவாக எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்குள், இவ்வாண்டு 2ஆம் திகதி சென்ற ஜமால், அங்கு கொல்லப்பட்டாரென, பலராலும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அத்துணைத் தூதரகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றே, சவூதி தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தது. அதே நிலைப்பாட்டையே, தொடர்ச்சியாக 2 வாரங்களாக, அந்நாடு வெளிப்படுத்தி வந்தது.

ஆனால், அதன் பின்னர், சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, “துணைத் தூதரகத்துக்குள் இடம்பெற்ற மோதலின் போது, ஜமால் உயிரிழந்தார்” என, சவூதி தெரிவித்தது. அதை ஏற்பதற்கு, சர்வதேச நாடுகள் மறுத்த நிலையில், ஜமாலின் மரணம், ஒரு கொலையென, வெளிநாட்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், அனுமதியளிக்கப்படாத நடவடிக்கையின் போதே அவர் கொல்லப்பட்டார் என, அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது, ஜமாலின் கொலை, திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை, சவூதி ஏற்றுக்கொண்டுள்ளது.

உலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் உத்தரவில் தான் இது நடந்தது என்பதைத் தவிர, ஏனைய அனைத்தையும், சவூதி இப்போது ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .