2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஜமாலின் கொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிவோம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டமை தொடர்பான உண்மைகளைக் கண்டறியப் போவதாக, துருக்கியும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதிபடத் தெரிவித்துள்ளன.

ஜமால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில், தொடர்ச்சியான மாறுபட்ட கருத்துகளை, சவூதி வெளிப்படுத்திவரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது, இதுவரை தெரியாமலேயே உள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த துருக்கிய ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான், ஊடகவியலாளர் ஜமால் கொல்லப்பட்டமைக்கு, அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கை தான் காரணம் எனக் கூறுவதற்கு, சவூதி அரேபியா மேற்கொள்ளும் முயற்சிகளை நிராகரித்தார். மாறாக, அக்கொலையின் பின்னால் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிவதற்கு, “உச்சத்திலிருந்து கீழ் வரை தேடுங்கள்” என, சவூதிக்கு அவர் தெரிவித்துள்ளார்.

ஜமாலின் பின்னால், சவூதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானே உள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், “உச்சம்” என ஜனாதிபதி ஏர்டோவான் குறிப்பிட்டமை, இளவரசரையே என்று கருதப்படுகிறது.

ஜமால் கொல்லப்பட்டார் என்று சவூதி ஏற்றுக்கொண்டமை, முக்கியமானதொரு படி எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ஏர்டோவான், ஆனால், இதற்குப் பின்னர், அக்கொலையின் பின்னால் யார் இருந்தனர் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும், தேவையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

“உத்தரவை வழங்கியவரிலிருந்து, அதை நிறைவேற்றியவர் வரை, அவர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும்” என, ஜனாதிபதி ஏர்டோவான் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜமால் கொல்லப்பட்டமை “காட்டுமிராண்டித் தனமானது” என வர்ணித்தார்.

“இவ்விடயத்தின் கீழ்நிலை வரை சென்று நாங்கள் உண்மையைக் கண்டுபிடிப்போம் என, அமெரிக்க மக்களுக்கு நான் உறுதி வழங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்த உப ஜனாதிபதி, ஜமாலை “அப்பாவியான மனிதன்” என வர்ணித்ததோடு, இதற்கான எதிர்வினை, ஐ.அமெரிக்கா, சர்வதேசம் ஆகியவற்றிடமிருந்து கிடைக்குமெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .