2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜமாலின் கொலையை ‘கண்டிக்கிறார்’ இளவரசர்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை, “வெறுப்பூட்டும்” கொலை என வர்ணித்துள்ள, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், அக்கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுமெனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்விடயத்தை மூடிமறைப்பதற்கு, சவூதி முயன்றது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், கருத்தெதனையும் அவர் தெரிவித்திருக்கவில்லை.

சவூதியின் தலைநகர் றியாத்தில் இடம்பெற்று வரும், முதலீட்டு மாநாட்டில், இளவரசர் சல்மான் தெரிவித்த கருத்துகள், இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட, முதலாவது கருத்துகளாகக் கருதப்படுகின்றன.

துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள, சவூதியின் துணைத் தூதரகத்திலேயே இக்கொலை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படுமெனக் கருதப்படுகிறது. ஆனால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என, இளவரசர் குறிப்பிட்டார்.

“இச்சம்பவம், சவூதியைச் சேர்ந்த அனைவருக்கும், வலிதரக்கூடிய ஒன்று. இது, வெறுப்பூட்டும் கொலையென்பதோடு, அதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள், பொறுப்புக்கூற வைக்கப்படுவர்” என அவர் தெரிவித்தார்.

ஜமாலின் கொலைக்குப் பின்னால், முடிக்குரிய இளவரசரே உள்ளார் என்று, சர்வதேச ரீதியாகக் குற்றஞ்சாட்டப்படுவதோடு, சவூதி மீது தடைகளை விதிப்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இம்மாநாட்டில் கலந்துகொண்ட இளவரசர் சல்மான், மகிழ்ச்சியான முகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல், முக்கியமான நாடுகளும் அமைப்புகளும், இம்மாநாட்டைப் புறக்கணித்திருந்தன. ஆனால், அதற்கு நடுவிலும், இம்மாநாடு தொடர்ந்து, நேற்றுடன் நிறைவுபெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X