2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஜமால் கொலை விசாரணை: ‘சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு வேண்டும்’

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட தொடர்பான விசாரணைகளில், சர்வதேச நிபுணர்களின் உதவி நாடப்படுதல் வேண்டும் எனக் கோரியுள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷெல் பச்செலட், கொல்லப்பட்ட ஜமாலின் சடலம் எங்குள்ளது என்பதை, சவூதி அரேபியா வெளிப்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

சவூதி அரேபிய மன்னர் குடும்பத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஜமால், துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் துணையத் தூதரகத்தில் வைத்து, ஒக்டோபர் 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் அவரின் கொலையை மறுத்த சவூதி, பின்னர் அக்கொலை, திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், ஜமாலின் கொலை தொடர்பான விசாரணைகளை, சவூதியும் துருக்கியும், தனித்தனியே மேற்கொண்டு வருகின்றன.

இவ்விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் மிஷெல், “அரசியல் கருதுதல்கள் இல்லை என்ற தோற்றம் எவையும் இல்லாமல், விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதற்கு, சாட்சிகளுக்கும் ஆதாரங்களுக்குமான முழுமையான அணுக்கத்தைக் கொண்ட, சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு, மிக அதிகமாக விரும்பப்படும்” எனத் தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, துருக்கி, சவூதி அதிகாரிகள் மேற்கொண்ட முனைப்புகளை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், எனினும், சவூதியின் முக்கிய அதிகாரிகள் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் நிலையில், சவூதியின் துணைத் தூதரகமொன்றில் இது இடம்பெற்றுள்ள நிலையில், பொறுப்புக்கூறலுக்கான அதிகபட்சத் தேவை காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

அதேபோல், ஜமாலின் சடலத்தை, வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டதாக சவூதி தெரிவித்துவரும் நிலையில், அவரின் சடலம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சடலம் எங்கிருக்கிறது என்ற விடயத்தை, சவூதி வெளிப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையையும், உயர்ஸ்தானிகர் இதன்போது முன்வைத்தமையானது, இவ்விடயத்தில் சவூதி மீதான அதிக அழுத்தத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .