2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

’ஜமால் கொல்லப்பட்டார்’: சவூதியின் ’கதையில்’ மீண்டும் மாற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கு எதிரான விமர்சனத்தைக் கொண்டிருந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டமை தொடர்பான தனது விளக்கத்தில், மீண்டுமொரு மாற்றத்தை, சவூதி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், இவ்விடயத்தில் ஏற்கெனவே அழுத்தங்களை எதிர்கொண்டுவரும் சவூதி, மேலும் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

இம்மாதம் 2ஆம் திகதி, துணைத் தூதரகத்துக்குள் சென்றிருந்த ஜமால், அதன் பின்னர் வெளியே வந்திருக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட பின்னர், அப்படியாக எதுவும் நடைபெறவில்லை எனவும், தூதரக வளாகத்துக்குள் சென்று சில நிமிடங்களிலேயே, ஜமால் வெளியேறிவிட்டார் எனவும், சவூதி கூறியது. அதேபோல், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்று வெளியான செய்திகளையும் தகவல்களையும், “பொய்கள்” என, அந்நாடு விமர்சித்தது.

இதே நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகக் கொண்டிருந்த சவூதி, அதன் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை (19), அதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. துணைத் தூதரகத்துக்குள் வைத்து, ஜமால் விசாரிக்கப்பட்ட போது, அங்கு மோதல் ஏற்பட்டது எனவும், அதன் போது, அவர் உயிரிழந்துவிட்டார் எனவும், அந்நாடு தெரிவித்தது. எனினும், 60 வயதான ஜமால், 18 பேருடன் மோதலுக்குச் சென்றிருக்க மாட்டார் எனவும், இது திட்டமிடப்பட்ட கொலை எனவும், தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சவூதியால் முன்வைக்கப்பட்ட விளக்கம், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளாலும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் ஃபொக்ஸ் தொலைக்காட்சிக்குக் கருத்துத் தெரிவித்த சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர், ஜமாலின் மரணம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, அதை “கொலை” என வர்ணித்தார். அத்தோடு, அனுமதியளிக்கப்படாத நடவடிக்கையின் விளைவாக அவர் கொல்லப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார். ஜமால் கொல்லப்பட்ட சம்பவத்தை, “மிகப்பெரிய தவறு” எனவும் அவர் வர்ணித்தார்.

சவூதியால் முன்னர் முன்வைக்கப்பட்ட, “மோதலைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்” என்பதற்கும்,  இப்போது அமைச்சரால் கூறப்படுகின்ற “அனுமதியளிக்கப்படாத நடவடிக்கையால் கொல்லப்பட்டார்” என்பதற்கும் உள்ள வித்தியாசம், உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

எனினும், ஜமாலின் சடலம் எங்குள்ளது எனத் தெரியாது என, சவூதி ஏற்கெனவே வெளிப்படுத்திய கருத்தையே, அமைச்சர் இதன்போதும் வெளிப்படுத்தினார். அத்தோடு, முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இச்சம்பவத்துக்கும் இடையில் தொடர்பேதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரண்டு கருத்துகளும், சர்வதேச ரீதியாகப் பொதுவாகக் கருதப்படுகின்ற விடயங்களுக்கு மாறானவையாகும். ஏனெனில், துணைத் தூதரகத்துக்குள் வைத்துக் கொல்லப்பட்ட ஜமாலின் உடல், அவரைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டோரால் சிதைக்கப்பட்டு, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, அவை வெளியே கொண்டு செல்லப்பட்டன என்றே, துருக்கி தெரிவிக்கிறது. இதே போன்றதொரு நிலைப்பாட்டுடனேயே, அநேகமான நாடுகள் காணப்படுகின்றன.

அத்தோடு, ஜமாலின் விமர்சனங்களில், முடிக்குரிய இளவரசர் சல்மான் மீதான விமர்சனங்கள் முக்கியமானவை என்பதோடு, அண்மைய சில ஆண்டுகளாக, சவூதியின் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டுள்ளார் என்று கருதப்படும் இளவரசர் சல்மானின் உத்தரவின்றி, இக்கொலை இடம்பெற்றிருக்காது என்றும், சர்வதேச ரீதியான விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இவை இரண்டையும் மாத்திரம், சவூதி இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், சவூதியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .