2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜிஹாதிகள் தாக்குதல்; 18 பேர் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள பேர்க்கினா ஃபாஸோவில், ஜிஹாதி ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதோடு, மேலும் 8 பேர் காயமடைந்தனர். இதன்போது, குறைந்தது 2 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என ஒரு செய்தியும், 3 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என மற்றொரு செய்தியும் தெரிவித்தது. 

துருக்கி உணவகமொன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள், சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அங்கிருந்தவர்களை, பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனவும், ஆரம்பகட்டச் செய்தி தெரிவித்தது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில், இரண்டு மாடிகளிலும் பணயக் கைதிகள் காணப்பட்டனர் என, பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

ஆயுததாரிகளிடமிருந்து, 11 பேரை, பாதுகாப்புப் படையினர் மீட்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால், மீட்கப்பட்டவர்களில் ஒருவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். அவ்வாறு உயிரிழந்தவர், துருக்கியைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்படுகிறது. 

இந்தத் தாக்குதலில், எத்தனை ஆயுததாரிகள் ஈடுபட்டனர் என்ற செய்தி, இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

அந்தப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றிய பாதுகாப்புப் பிரிவினர், அதன் பின்னர், எதிர்த் தாக்குதலை ஆரம்பித்தனர். 

இந்தத் தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக, பேர்க்கினோ ஃபாஸோவின் தொடர்பாடல் அமைச்சர் றெமிஸ் டன்ட்ஜினோ, இலங்கை நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

ஆரம்பத்தில் அதிகாரிகள், 20 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தாலும், உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், 18 பேர் கொல்லப்பட்டனர் என்றே தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .