2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜெயலலிதாவின் பேச்சை நிறைவேற்றிய மோடி

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மிர் தொடர்பாக, 35 வருடங்களுக்கு முன்பு, முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, மாநிலங்களவையில் எழுப்பிய கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வைத்துவிட்டார் என்று, தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

1984ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களின் விவகாரங்கள் குறித்துப் பேசியிருந்தபோதிலும், தமிழகம், தமிழர் நலன் சார்ந்து அதிகமாகப் பேசியிருந்தார்.

மாநில உரிமைகள், இலங்கை பிரச்சினை, கங்கை-காவிரி இணைப்புத் திட்டம், கைத்தறி நெசவாளர் பிரச்சினைகள், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருந்தார்.

எனினும், கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக, மாநிலங்களவையில் ஜெயலலிதா எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய அரசாங்கம் தற்போது விடையளித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவர் உயிரோடு இருந்திருந்தால், பிரதமர் மோடியின் இந்தச் செயற்பாட்டுக்கு, வாழ்த்து தெரிவித்திருப்பார் என்று, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

1984ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலைத்த​போது, ஆட்சியைக் கலைத்ததைக் கண்டித்து, சுமார் 10 நிமிடங்கள் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் உரையாற்றிய ஜெயலலிதா, இறுதியில் தனது உரையை முடிக்கும்போது, இரு கேள்விகளை முன்வைத்தார். அவரது அந்தக் கேள்விகள் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

ஜம்மு-காஷ்மிர் அரசைக் கலைத்துவிட்டு, அங்கு ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவருவது தான் மத்திய அரசின் திட்டமா என்றும் ஜம்மு-காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏன்; அதை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட வரையறைக்குள் ஏன் கொண்டுவரக் கூடாது என்றும் அவர் வினவியிருந்தார்.

அவரால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.கவைச் சேர்ந்த உறுப்பினர்கள், மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X